சிவில் பணியாளர்கள் அச்சுறுத்தப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுகளுக்கு அங்கஜன் மறுப்பு!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவில் பணியாளர்கள் தன்னால் அச்சுறுத்தப்பட்டதாக, முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை, யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் மறுத்துள்ளார்.

இந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்துரைத்த அங்கஜன் இராமநாதன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த சமூர்த்தி பயனாளிகளுடன் கலந்துரையாடலொன்றை நடாத்துவதற்கு தீர்மானித்திருந்த நிலையில், அதற்கான அனுமதியினை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவிடம் கோரியிருந்ததாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவை பிரதிநிதித்துவம் செய்வதன் காரணமாக, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கு யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவிடம் அனுமதி கோரியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கோரிக்கை வரவேற்கப்பட்டதுடன், நிகழ்வை நாடாத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளர் அங்கஜன் இராமநாதன் உதவியாளர் ஒருவர் கிளிநொச்சி மாவட்ட சமூர்த்தி பயனாளிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்துவதற்கு கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனிடம் அனுமதி கோரியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயலாளருடன் கலந்துரையாடி அறிவிப்பதாக, கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனினால், அங்கஜன் இராமநாதனின் உதவியாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த கோரிக்கைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயலாளர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையிலேயே, சிவில் பணியாளர்களை அங்கஜன் இராமநாதனின் ஒருங்கிணைப்பாளர்கள் அச்சுறுத்தியதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டியுள்ளதாக அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் குறித்த கருத்துகளை அரசாங்கத்திற்கு எதிரான ஊடகங்கள் பயன்படுத்திக் கொண்டு, வேறுபாடுகளை உருவாக்க முயற்சிப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இந்த விடயம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து தான் வருந்துவதாகவும், அமைச்சரின் கருத்துடன் தான் உடன்படவில்லை எனவும், கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தொலைபேசி மூலம் தனக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த பிளவு நிலை குறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களிடம் வினவியபோது, அவர்கள் பின்வருமாறு தெரிவித்தனர்.

2010 ஆம் ஆண்டு, அங்கஜன் இராமநாதன் அரசியலுக்குள் நுழையும் வரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான ஒரே பிரதிநிதியாக டக்ளஸ் தேவானந்தா மட்டுமே காணப்பட்டதாக, அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனினும், 2010 ஆம் ஆண்டு அரசியலுக்குள் நுழைந்த அங்கஜன் இராமநாதனின் வாக்கு வங்கி படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.

தேர்தல் வாக்குகள்

2010 பொதுத் தேர்தல் (தெரிவு செய்யப்படவில்லை) – 3,416

2013 மாகாண சபைத் தேர்தல் – 10,034

2015 பொதுத் தேர்தல் (தெரிவு செய்யப்படவில்லை, எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டிலுக்குள் உள்ளடக்கப்பட்டார்) -17,400

2020 பொதுத் தேர்தல் -36,365

இதன் அடிப்படையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் யாழ்ப்பாணத்தில் இருந்து முதல் தடவையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி, அனைத்து அரசியல் ஆய்வாளர்களையும், அங்கஜன் இராமநாதன் ஆச்சரியப்படுத்தியிருந்தார்.

அவர் வென்றது மட்டுமல்லாமல், அதிக பட்ச விருப்பு வாக்குகளையும் பெற்றமை, இந்த ஆச்சரியத்தை மேலும் அதிகப்படுத்தியது.

யாழ்ப்பாணத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்தவொரு அடிப்படையும் இல்லாமல் 49 ஆயிரத்து 373 வாக்குகளை பெற்றிருந்ததுடன், அந்த அனைத்து வாக்குகளும் அங்கஜன் இராமநாதனுக்கே கிடைக்கப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இந்த வாக்கு வங்கியானது ஈ.பி.டி.பி கட்சி பெற்ற வாக்குகளை விட அதிகமாக இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இது 27 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற அரசியலில் ஈடுபட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா மற்றும் அவரது ஈ.பி.டி.பி கட்சி உள்ளிட்ட, அங்கஜன் இராமநாதனின் அரசியல் எதிரிகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருந்தது.

அங்கஜன் இராமநாதனின் இந்த வெற்றிக்குப் பின்னர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது யாழ்ப்பாண ஒருங்கிணைப்பாளர்களைக் கண்டித்திருந்ததாகவும் அறிய முடிகிறது.

இந்த விடயம் தொடர்பில் ஆங்கில நாளிதழொன்றுக்கு கருத்துரைத்த அங்கஜன் இராமநாதன், அரசாங்க உறுப்பினர்களுக்கிடையிலான கருத்து மோதலானது, போட்டி அரசியல் கட்சிகளின் சுயநல அரசியலுக்காக பயன்படுத்தப்படலாம் என குறிப்பிட்டார்.

அத்துடன், கடந்த தேர்தலானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அரசியல் சூழ்நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அடிப்படை சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்துவதே முக்கிய தேவை எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!