சுழிபுரம் சிறுமி கொலை – 21 வயது இளைஞன் ஒப்புதல் வாக்குமூலம்!

சிறுமியை மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்று என் கையை அந்தரங்கப் பகுதியில் கை வைத்தேன். அப்போது அவள் மயங்கிவிட்டாள். அதன் பின்னர் கயிற்றால் கழுத்தை நெரித்தேன் என சுழிபுரம் பகுதியில் ஆறு வயது சிறுமியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாருக்கு வழங்கிய தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியை சேர்ந்த ஆறு வயதான சிறுமியொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். சடலம் மீட்கப்பட்ட போது கழுத்து பகுதி நெரிக்கப்பட்ட காயங்கள் காணப்பட்டதுடன் கீழ் உள்ளாடை மாத்திரமே காணப்பட்டிருந்தது. இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக ஊர் மக்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைய வட்டுக்கோட்டை பொலிஸாரால் நான்கு பேரை ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களிடம் மிகத் தீவிரமான விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அதே பகுதியை சேர்ந்த 21வயதான இளைஞன் தானே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டு அது தொடர்பான வாக்குமூலத்தை பொலிஸாருக்கு வழங்கியுள்ளதாகவும் அவ் வாக்குமூலத்திலேயே மேற்படி தெரிவித்திருந்தாகவும் மூத்த பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அந்த பொலிஸ் உயர் அதிகாரி மேலும் தெரிவித்திருப்பதாவது, குறித்த இளைஞனது தாய் சிறுவயதிலேயே விட்டுச் சென்ற நிலையில் தந்தையுடனேயே வளந்துள்ளார். இவ்வாறான நிலையில் இவரே இக் கொலையை செய்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார். சம்பவ தினமான நேற்றுமுன்தினம், சிறுமி பாடசாலை விட்டு வீடு சென்ற போது புறா காட்டுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.

மறைவான இடமொன்றிற்கு அழைத்து சென்ற நிலையில் அவரது பாடசாலை சீருடையினை அகற்றி, சிறுமியை துஷ்பிரயோகப்படுத்தியுள்ளார். இதன்போது அச் சிறுமி மயக்கமடைந்துள்ளார். இதன் பின்னர் சிறுமியின் தோட்டை எடுத்து விட்டு மாடு கட்டுவதற்கு பயன்படும் கயிற்றால் சிறுமியின் கழுத்தை நெரித்துள்ளார். இதன் பின்னரேயே குறித்த கிணற்றுக்குள் சிறுமியை தூக்கி வீசியுள்ளார்.

இக் குற்றச் செயலை செய்துவிட்டு குறித்த நபர் பிள்ளையை காணவில்லை என பெற்றோர் ஊர் மக்கள் தேடும் போது இவரும் சேர்ந்து தேடியுள்ளார். இந்நிலையில் இந் நபர் அப் பிரதேசத்தில் சம்பவம் இடம்பெற்ற அன்று நண்பகல் புறா இருக்கின்றதா என அப்பகுதியில் விசாரித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் அப் பகுதிக்கு பெரிதும் வந்திராத அவர் அன்று மாத்திரம் வந்திருந்தது ஏன் என இச் சம்பவம் இடம்பெற்ற பின்னர் ஊர்மக்கள் சிந்தித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியமையாலேயே இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலும் குறித்த நபர் வழங்கிய வாக்கு மூலத்திற்கு அமைய மறைத்து வைக்கப்பட்டிருந்த அச் சிறுமியின் பாடசாலை சீருடை, புத்தக பை போன்றன மீட்கப்பட்டதுடன் அவற்றில் இரத்த கறைகள் காணப்பட்டமையும் அவதானிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை தொடர்ந்து குறித்த நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மூத்த பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!