சுப்பர்மடத்தில் இளைஞனைத் தாக்கிய மூவருக்கு விளக்கமறியல்!

பருத்தித்துறை – சுப்பர்மடத்தில் கடற்தொழிலாளர் ஓய்வுக் கொட்டகையில் உறங்கிய இளைஞனை இரும்புக் கம்பியினால் தாக்கி இழுத்துச் சென்று வீதியில் வீசிய குற்றச்சாட்டில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட மூவரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் கடந்த 11ம் திகதி இடம்பெற்ற நிலையில் தாக்குதல் நடத்திய மூவர் நேற்றுமுன்தினம் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

மூவரும் நேற்று பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். பாதிக்கப்பட்ட இளைஞன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், தாக்குதல் தொடர்பில் மன்றில் சமர்ப்பணம் செய்தனர். அதனை ஆராய்ந்த நீதிவான், சந்தேக நபர்கள் மூவரையும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இருதரப்புக்கு இடையிலான முன்பகை காரணமாக இளைஞன் மீது இரும்புக் கம்பிகளால் தாக்கியதுடன் சுப்பர்மடத்தைச் சேர்ந்த ஜெகதீசன் றீகன் (வயது-22) என்ற இளைஞன் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!