சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கான தேவை இல்லை – பிரதமர்

நாட்டில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படாத நிலையில், சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கான அவசியமில்லை என நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் சந்தை தொடர்பிலான கலந்துரையாடலின் போதே பிரதமர் நேற்று (17) இதனை தெரிவித்துள்ளார்.

அரிசி, தேங்காய், பால் மா, மீன், இறைச்சி, முட்டை, பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, மரக்கறி மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றிற்கான நிவாரணங்களை நுகர்வோருக்கு வழங்குவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமரின் ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சிப் பிரிவின் அறிக்கையின் பிரகாரம் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது வர்த்தக பற்றாக்குறையை அதிகரிக்க வழிவகுக்கும் என கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, உள்ளூர் விவசாயத்தை மேம்படுத்துதல், உள்ளூர் வணிகங்களை வலுப்படுத்துதல் போன்ற திட்டங்கள் மூலம் அந்நிய செலாவணியை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை மத்திய வங்கியின் பிரதிநிதிகள் கலந்துரையாடலின் போது குறிப்பிட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!