அமெரிக்காவில் பயங்கரம்: 8 பெண்களை துடிதுடிக்க சுட்டுக்கொன்ற மர்ம நபர்!

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக ஆசிய அமெரிக்கர்கள் மீது வெறுப்புணர்வு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாட்டில் கொரோனா வைரஸ் பரவ ஆசிய நாட்டு மக்களே காரணம் என்கிற தவறான கண்ணோட்டத்தால் அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல் முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய ஜனாதிபதி ஜோ பைடன் ஆசிய அமெரிக்கர்கள் மீதான தாக்குதல்களை கடுமையாக கண்டித்தார். இந்த வெறுப்புணர்வு தாக்குதல்கள் அமெரிக்கர்களை பிரதிபலிக்கும் செயல்கள் அல்ல என்றும், உடனடியாக அவை நிறுத்தப்படவேண்டுமென்றும் அவர் எச்சரித்தார்.

மசாஜ் பார்லரில் துப்பாக்கிச்சூடு

இந்த நிலையில் அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் ஆசிய அமெரிக்கர்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகர் அட்லாண்டாவில் ஆசிய அமெரிக்கர்கள் ‘ஸ்பா’ எனப்படும் மசாஜ் பார்லர்களை அதிக அளவில் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு அட்லாண்டாவின் புறநகர் பகுதியான அக்வொர்த்தில் உள்ள ஒரு மசாஜ் பார்லருக்குள் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார்.

அவர் அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக அந்த மசாஜ் பார்லருக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

3 பெண்கள் பிணமாக கிடந்தனர்

இதையடுத்து போலீசார் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இதற்கிடையில் அட்லாண்டாவில் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு மசாஜ் பார்லரில் கொள்ளை சம்பவம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றபோது மசாஜ் பார்லருக்குள் 3 பெண்கள் துப்பாக்கி குண்டு காயங்களுடன் பிணமாக கிடந்தனர்.

போலீசார் இதுபற்றி விசாரித்து கொண்டிருக்கையில் அதே பகுதியில் உள்ள மற்றொரு மசாஜ் பார்லரில் துப்பாக்கிச்சூடு நடப்பதாக தகவல் கிடைத்தது.‌

இதையடுத்து போலீசார் தாமதிக்காமல் உடனடியாக அங்கு விரைந்தனர். ஆனால் இம்முறையும் அவர்கள் வருவதற்குள் கொலையாளி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.‌

துப்பாக்கிச் சூடு நடந்த 3-வது மசாஜ் பார்லரில் இளம்பெண் ஒருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

கொலையாளி கைது

இப்படி 3 மசாஜ் பார்லர்களில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் மொத்தம் 8 பெண்கள் கொல்லப்பட்டதாகவும் அவர்களில் 6 பேர் ஆசிய அமெரிக்கர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் 3-வதாக துப்பாக்கி சூடு நடந்த மசாஜ் பார்லரில் இருந்த கண்காணிப்பு கேமராவில் கொலையாளியின் உருவம் பதிவாகி இருந்ததை போலீசார் கண்டறிந்தனர்.

இதனைக்கொண்டு போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் இறுதியில் அட்லாண்டாவின் கிறிஸ்ப் நகரில் கொலையாளி கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஜார்ஜியா மாகாணத்தின் உட்ஸ்டாக் நகரை சேர்ந்த 21 வயதான ராபர்ட் ஆரோன் லாங் என்பது தெரியவந்துள்ளது.

3 துப்பாக்கி சூடு சம்பவங்களையும் இவரே நிகழ்த்தியிருப்பார் என போலீசார் மிகவும் தீவிரமாக நம்புகின்றனர். இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!