மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ரணில் ஏன் கைது செய்யப்படவில்லை -எதிர்க்கட்சி கேள்வி

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில், ரணில் விக்ரமசிங்கவை ஏன் கைது செய்யவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி கேள்வி எழுப்புகின்றார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“நாம் நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்த சந்தர்ப்பத்தில், மத்திய வங்கி பிணை மோசடியுடன் தொடர்புடைய நபர்களுக்கு தண்டனையை வழங்க வேண்டும் என நாம் பின்வரிசையில் இருந்து வலியுறுத்தினோம். இதனுடன் தொடர்புடைய பிரதான சூத்திதாரி இருக்கும் போது சிறிய குழுக்களை கைது செய்து பயனில்லை. அலோசியஸ் போன்றவர்களுக்கு எமது ஆட்சிக்காலத்திலேயே சட்ட நடவடிக்கைககள் எடுக்கப்பட்டன. முன்னாள் நிதியமைச்சர் ரவி கணருநாயக்கவை கைது செய்துள்ளார்கள். ஆனால் அவருக்கு அப்பால் இதன் பிரதான சூத்திரதாரிகளாக ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டவர்களே இருப்பதாக கூறினார்கள். அவ்வாறு எனில் ரணில் விக்ரமசிங்கவையும் கைது செய்ய வேண்டும் அல்லவா? தற்காலிகமாக வேடிக்கை நடவடிக்கையொன்றையே மேற்கொள்கின்றார்கள். ஏனென்றால் சீனி மோசடி தற்போது பாரதூரமான அளவுக்கு சென்றுள்ளது.”

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 சந்தேநபர்களையும் சந்திப்பதற்கு, வெளி நபர்களுக்கு அனுமதி மறுபக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த சந்தேநபர்கள், வெலிக்கடை மகளிர் சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, அவர்களுக்கு உணவுகளைக் கொண்டு செல்லவும், வெளி நபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, வெலிக்கடை மகளிர் சிறைச்சாலையில் கைதிகளை தனிமைப்படுத்தும் நோக்கில், குறித்த சிறைச்சாலையில் இருந்த பெண் கைதிகள், அண்மையில் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மத்தியவங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேருக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அதே பிரிவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ETI நிதி நிறுவன மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கும், இன்று பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த அனைத்து சந்தேக நபர்களினதும் PCR பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின்னர், அவர்களை எந்த சிறைச்சாலைக்கு அனுப்புவது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என, அவர் கூறியுள்ளார்.

மேலும், குறித்த சந்தேக நபர்களில் யாருக்கேனும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களை கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அனுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை, மீள நாட்டுக்கு அழைத்துவரும் நோக்கில், சட்டமா அதிபரினால் மூன்றாவது தடவையாகவும் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்ட ஆவணங்கள், அந்த நாட்டு சட்டமா அதிபரினால் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிணை முறி மோசடி தொடர்பான வழக்கு, கொழும்பு மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மேலதிக சொலிசிட்டர் நாயகம் பாரிந்த ரணசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வழக்கு, சம்பா ஜானகி ராஜரத்ன, தமித் தொட்டவத்த மற்றும் நாமல் பலல்லே ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே, பிணை முறி மோசடி வழக்கின் முதல் பிரதிவாதியான அர்ஜுன் மகேந்திரன் குறித்து, மேலதிக சொலிஷிட்டர் நாயகம் தகவல்களை முன்வைத்துள்ளார்.

இதேவேளை, இந்த வழக்கின் 10 ஆவது பிரதிவாதியான பேர்பச்சுவல் டிரஷரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான அஜான் கார்திய புஞ்சிஹேவா, தற்போது மலேசியாவில் தங்கியிருப்பதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த பிரதிவாதியை நாட்டுக்கு அழைத்துவர, வெளிவிவகார அமைச்சு மற்றும் அந்த நாட்டு இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஊடாக, அழைப்பானை விடுப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!