உடல் குறைப்பாட்டுடன் இந்திய தம்பதிக்கு பிறந்த குழந்தை: நாடுகடத்தும் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய தம்பதியருக்கு உடல் குறைப்பாட்டுடன் பிறந்த குழந்தையையும், அக்குடும்பத்தையும் ஏற்க மறுத்து அனைவரையும் இந்தியாவுக்கு நாடுகடத்தும் செயலில் ஆஸ்திரேலிய அரசு ஈடுபட்டிருக்கிறது. கயான் கட்யால் எனும் 6 வயதாகும் அக்குழந்தைக்கு ஆஸ்திரேலிய பிறப்புச் சான்றிதழ் உள்ள போதிலும் ஆஸ்திரேலியாவில் அக்குழந்தைக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாக கவலைத் தெரிவித்திருக்கிறார் குழந்தையின் தந்தையான வருண் கட்யால்.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியரான வருண் கட்யால் ஐரோப்பிய சமையல் குறித்து கற்பதற்காக ஆஸ்திரேலியா சென்று பின்பு ஆஸ்திரேலியாவிலேயே தனது பணி வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டார். இந்தியரான அவரது மனைவியும் திருமணத்துக்குப் பிறகு ஆஸ்திரேலியா சென்றுவிட்டார்.

ஆஸ்திரேலியாவில் தனது உணவகத்தைத் திறக்கவும், நிரந்தரமாக வசிப்பதற்கான PR விசாவுக்காகவும் வருண் காத்திருந்த சூழலில் அவரது 6 வயது குழந்தையை ஏற்க மறுக்கும் ஆஸ்திரேலியா, அக்குடும்பத்தை நாடுகடத்த திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

ஆஸ்திரேலியாவில் நிரந்தர வாசிகளை அல்லாதோரின் குழந்தைக்கு உடல் குறைப்பாடு இருந்தால் ஆஸ்திரேலிய புலம்பெயர்வு சட்டத்தின் கீழ் அவர்கள் நாடுகடத்துவதற்கான வழி உள்ளது. அதே சமயம், இவ்வாறான உடல் குறைப்பாடு காரணமாக எத்தனை குழந்தைகள் நாடுகடத்தப்பட்டிருப்பார்கள் என்ற தகவல் எதுவும் இல்லை.

“ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்கவே இங்கு இருக்கிறார்கள். ஆனால் உடல் குறைப்பாட்டுடன் ஒரு குழந்தை பிறந்ததும் அவர்கள் இந்நாட்டுக்கு வேண்டாதவர்கள் ஆகிவிடுகிறார்கள்,” Welcoming Disability அமைப்பின் ஜேன் கோதர்ட் தெரிவித்திருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!