சங்குமண்கண்டி மயானத்தில் புத்தரை குடியமர்த்த முயற்சி!

அம்பாறை – பொத்துவில், சங்குமண்கண்டி மயானப் பகுதியில் புத்தர் சிலை அமைக்க எடுத்த முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.

பௌத்தபிக்கு தலைமையிலான குழுவினர் புத்தர் சிலை அமைக்க முயன்றதை அடுத்து, பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் த.சுபோதரன் மக்களுடன் சமுகமளித்து, அங்குவந்த பிக்குமாரிடம் நியாயத்தை எடுத்துரைத்ததுள்ளதை அடுத்து அவர்கள் பின்வாங்கினர்.

இது தொடர்பில் உறுப்பினர் சுபோதரன் தெரிவிக்கையில், “பொத்துவில், முகுதுமகாவிகாரை பௌத்தபிக்கு தலைமையிலான குழுவினர் எமது மயானப்பகுதியில் புத்தர்சிலை அமைப்பதற்காக கொங்கிரீட் தூண் முதலான பொருட்களுடன் வந்திறங்கினர். இது விடயம் மக்களுக்குத் தெரியவரவே, அங்கு மக்கள் ஒன்றுகூடியமையால் நிலைமை பதட்டத்துக்குள்ளானது.

“நானும் அங்குசென்று, அவர்களிடம் இது எமது பிரதேச மயானம். இதற்குள் புத்தர் சிலை அமைப்பதை எமது மக்கள் விரும்பவில்லை. எனவே, முயற்சியை கை விடுங்கள் என்றேன்.

“பதிலுக்கு பிக்குமார், இது வன இலாகா கட்டைபோட்ட பகுதிதானே நாங்கள் சிலை வைப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று வாதம் புரிந்தார்கள். மக்களின் காணிகளை வன இலாகா கட்டைபோட்டு வைத்துள்ளது. அதைவிட இது மக்கள் வாழும் பகுதி. அவர்கள் இங்கு புத்தர் சிலை வருவதை விரும்பவில்லை. எனவே, இங்கு பிரச்சினையை எழுப்ப வேண்டாம் என்றேன்.

“அவர்கள் எனது வாதத்தை ஏற்றுக்கொண்டு, கொண்டுவந்த பொருட்களுடன் கிளம்பினர். பிரச்சினை தீர்ந்தது” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!