மீனவர்களை எச்சரித்த சென்னை வானிலை ஆய்வு மையம்!

வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாக வாய்ப்புள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 30 முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவக்கூடும். வரும் ஏப்ரல் 2-ம் தேதி முதல் வடமேற்கு திசையிலிருந்து தரைக்காற்று தமிழகப் பகுதி நோக்கி வீச சாத்தியக் கூறுகள் உள்ளன. இதன் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.

29-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக தென்காசியில் 3 செமீ, போடிநாயக்கனூர், செங்கோட்டை ஆகிய இடங்களில் தலா 2 செமீ, சூரலகோடு, ஆயக்குடி ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தற்போது நிலவும் வளிமண்டல சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், அதனை தொடர்ந்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன்காரணமாக 30-ம்தேதி தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதி, 31-ம்தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதி ஆகிய இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.

தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக 30-ம் தேதி தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதிகள் மேலும்வலுப்பெற்று மழை கொடுக்க வாய்ப்பில்லை. கடல் பகுதியிலேயே செயலிழந்துவிட வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!