வடக்கு அபிவிருத்தி குறித்து அலரி மாளிகையில் 3 மணி நேரம் ஆலோசனை

வடக்கு, மாகாண அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் சிறப்புக் கூட்டம் ஒன்று சிறிலங்கா பிரதமரின் அதிகாரபூர்வ செயலகமான அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்றுள்ளது.

நேற்றுக்காலை 10 மணி தொடக்கம், பிற்பகல் 1 மணி வரை – கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் சுவாமிநாதன், ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், ஆகியோரும், முப்படைகளின் தளபதிகள், காவல்துறை அதிகாரிகள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்கள், மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன் ஆகியோருடன், யாழ். மாநகர முதல்வர் ஆர்னோல்டும் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தில், பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல், யாழ். செம்மணிப் பகுதியில் 273 ஏக்கர் பரப்பில் மாதிரி நகரத்தை உருவாக்குதல், காங்கேசன்துறை, பரந்தன் ஆகிய இடங்களில் கைத்தொழில் பூங்காக்களை உருவாக்குதல், போரினால் அழிந்து போன யாழ். மாநகர சபைக் கட்டடத்தை அதே இடத்தில் அமைத்தல், ஆகியவற்றை செயற்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு குறித்தும் ஆராயப்பட்டது. விரைவில் மேலும் பல காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறிலங்கா பிரதமர் உறுதியளித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரால் அண்மையில் 48 பேர் கொண்ட வடக்கு,கிழக்கு அபிவிருத்திக்கான சிறப்புச் செயலணி அமைக்கப்பட்டிருந்தது. அதில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் உள்வாங்கப்படவில்லை.

இந்த நிலையில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வடக்கு, அபிவிருத்தி பற்றி ஆராயக் கூட்டிய சிறப்பு கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!