மட்டு. மாநகர ஆணையாளருக்கு இடைக்கால தடை!

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வரினால் சபை அனுமதியுடன் பிரதி ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தில் ஆணையாளர் தலையிடுவதை தடுக்கும் வகையில் இடைக்காலத் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர மேயரால், ஆணையாளருக்கு எதிராக இடைக்கால தடை எழுத்தாணை கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை நேற்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

”மாநகர சட்டத்தின்படி மேயருக்கு இருக்கின்ற அதிகாரங்களை, விரும்பினால் ஆணையாளருக்கு பாரப்படுத்தலாம். அப்படியாக இந்தப் புதிய ஆணையாளர் வந்தபோது 10 அதிகாரங்கள் கையளிக்கப்பட்டிருந்தன. ஆனால், அதற்குப் பின்னர், கடந்த பெப்ரவரி 11ஆம் திகதி இன்னொரு சபைத் தீர்மானத்தின் மூலமாக கையளிக்கப்பட்ட அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டன.

அந்த அதிகாரங்களை சட்டப்படி மீளப்பெற்றிருந்தாலும்கூட தான் அதற்கு ஒழுகி நடக்கமாட்டேன் என்றும் அந்த அதிகாரங்களைத் தானே பயன்படுத்துவென் என்றும் ஆணையாளர் விடாப்பிடியாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பதன் காரணமாக அவரை அப்படியான செயற்பாட்டில் இருந்து தவிர்ப்பதற்கும் அந்த அதிகாரங்களை அவர் உபயோகிப்பதைச் சட்டப்படியாக நிறுத்துவதற்கும் இவ்வாறு இடைக்கால தடை எழுத்தாணை கோரி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி எம்.என்.அப்துல்லா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த தவணை இந்த வழக்கு தொடர்பான அறிவித்தல்கள் பிரதிவாதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆட்சேபனை தொடர்பான விவாதத்தினையும் இடைக்கால தடையுத்தரவு விவாதத்தினையும் நீதிமன்றம் செவிமடுத்து ஜுன் மாதம் 03ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!