மியன்மாரில் சிக்கியுள்ள மீனவர்கள் மீட்கப்படுவர் – அமைச்சர்

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கை மீனவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

இலங்கை கடற்றொழிலாளர்கள் தவிர்க்க முடியாத காரணங்களினால் வெளிநாடுகளின் எல்லைப் பாதுகாப்பு தரப்பினரிடம் சிக்கிக் கொள்வார்களாயின் அவர்களை மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களின் உறவினர்களால் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மியன்மார் தூதரக அதிகாரிகளுடன் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கடற்றொழில் அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும், மியன்மாரில் காணப்படுகின்ற தற்போதைய அரசியல் சூழல் காரணமாக கைது செய்யப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்வதில் சில நடைமுறை காலதாமதங்கள் காணப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

மியன்மார் கடற்பரப்பில் நுழைந்த குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டு கடந்த 3 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!