மகன் சார்லஸிடம் இளவரசர் பிலிப் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்!

இறுதி நாட்களில் பட்டத்து இளவரசர் சார்லஸிடம், இளவரசர் பிலிப் 3 கோரிக்கைகளை முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமது மறைவுக்கு பின்னர், முதல் கடமையாக 93 வயதாகும் ராணியாரை கவனித்துக் கொள்ள வேண்டும் என இளவரசர் பிலிப் கேட்டுக்கொண்டுள்ளார். தமது நேரம் நெருங்கிவிட்டதாக உணர்ந்த இளவரசர் பிலிப், சில வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் தொற்று மற்றும் இதய அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு நேரத்தை செலவழித்த நாட்களில், அவரை சந்திக்க தனது மகனை அழைத்துள்ளார்.

பிப்ரவரி இறுதியில், மன்னர் ஏழாம் எட்வர்ட் மருத்துவமனையில் இந்த தந்தை- மகன் உரையாடல் நடந்துள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதில் முதன்மையாக, தமது மறைவுக்கு பின்னர் ராணியாரை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள வேண்டும் என இளவரசர் பிலிப் கேட்டுக் கொண்டுள்ளார்.

மட்டுமின்றி, வாரிசுகள் அரச குடும்பத்தை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பதையும் வெளிப்படையாக விவாதித்துள்ளனர்.

தந்தை மகனுக்கு இடையே நடந்த இந்த உரையாடலானது, இதயப்பூர்வமாகவும், வெளிப்படையாகவும் உண்மையாகவும் இருந்தது என அரண்மனை வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

நோயாளியாக நான்கு வாரங்கள் மருத்துவமனையில் கழித்த பின்னர் மார்ச் 16 அன்று அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியபோது,

ஜூன் 10 அன்று தனது 100 வது பிறந்தநாளைக் காண அவர் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கை அரச குடும்பத்து உறுப்பினர்களுக்கு இருந்தது.

ஆனால் வீட்டில் ஓய்வெடுத்திருந்தாலும், பல வாரங்கள் மருத்துவமனையில் மற்றும் இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல் நிலை மீண்டும் மோசமடைந்தது.

இளவரசர் சார்லஸ் கடந்த சில வாரங்களாக தனது தந்தையுடன் நேரில் மற்றும் தொலைபேசி மூலம் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது, செவ்வாயன்று தான் அவரை கடைசியாகப் பார்த்ததாக நம்பப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!