ஜெயலலிதா எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது தெரியாது: – மாட்டி கொண்ட செவிலியர்

ஜெயலலிதா எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதே எனக்கு தெரியாது என, விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ செவிலியர் பிரேமா கூறியுள்ளது பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உடல்நிலை குறைபாடு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், டிசம்பர் 5-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கூறி வந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் விசாரணை ஆணையத்தில் ஆஜரான அப்பல்லோ மருத்துவர் நளினி மற்றும் செவிலியர் பிரேமாவிடம், ஆணையத்தின் வழக்கறிஞர்கள் பார்த்த சாரதி, நிரஞ்சன் ஆகியோர் குறுக்கு விசாரணை நடத்தினர்.

அப்பொழுது பதிலளித்த செவிலியர் பிரேமா, ஜெயலலிதா எந்த நோய்க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதுவே தெரியாது என கூறியுள்ளார். ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட சிறப்பு வார்டில் பணியில் இருக்கும் செவிலியர்களை கண்காணிக்கும் வேலையினையும், ஜெயலலிதாவிற்கு வழங்கப்படும் மருந்து குறிப்புகளையும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு செவிலியர், இப்படிப்பட்ட அலட்சியமான பதிலை அளித்துள்ளது விசாரணை ஆணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேமாவின் பதில் ஆறுமுகசாமி உட்பட பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் அதே வேளையில், யாரேனும் சொல்லிக்கொடுத்து தான் பிரேமா இப்படி பதில் அளிக்கிறாரோ என்ற சந்தேகத்தினையும் எழுப்பியுள்ளது. இதனால் பிரேமா மீண்டும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!