ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான எவா் கிவன் கப்பலை பறிமுதல் செய்த எகிப்து அரசு!

உரிமையாளர்களின் பிடிவாதம் காரணமாக சூயஸ் கால்வாயில் தரை தட்டிய எவா் கிவன் கப்பலை எகிப்து அரசு பறிமுதல் செய்துள்ளது. ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான, எவா் கிவன் என்ற சரக்கு கப்பல், கடந்த மாதம் 23ம் திகதி எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக சென்றபோது கால்வாயின் குறுக்கே திரும்பி பக்கவாட்டில் தரை தட்டி நின்றது. ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் நீர்வழித்தடமான சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடலை இணைக்கும் வழி பாதையாக உள்ளது.

இதனால், சர்வதேச நாடுகளில் வர்த்தகத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டது. சுமார் 6 நாட்கள் தீவிர முயற்சிக்கு பின்னர் தரைதட்டி நின்ற கப்பல் மீண்டும் மிதக்கத்தொடங்கியது.

இதையடுத்து, சூயஸ் கால்வாயில் நீர்வழிப்போக்குவரத்து மீண்டும் சுமூக நிலைக்கு திரும்பியது. மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் விசாரணை உள்ளிட்டவை முடிவுக்கு வரும்வரையில் எவர் கிவன் கப்பல் சூயஸ் கால்வாயின் பாதுகாப்பான பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கப்பல் தரை தட்டியதால் ஏற்பட்ட பாதிப்பு, நீர்வழிப்போக்குவரத்து தடைபட்டதால் ஏற்பட்ட இழப்பு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு ’எவர் கிவன்’ கப்பல் உரிமையாளர் 900 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு தரவேண்டும் என்று சூயஸ் கால்வாய் நிர்வாகம் சார்பில் எகிப்து நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது.

இந்த வழக்கு எகிப்து நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் இழப்பீடு வழங்கும் வரை எவர் கிவன் சரக்கு கப்பலை பறிமுதல் செய்ய எகிப்து அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, எவர் கிவன் சரக்கு கப்பல் சூயஸ் கால்வாய் நிர்வாக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே, இழப்பீடு தொகை வழங்க எவர் கிவன் கப்பல் நிறுவன நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் கப்பல் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இருப்பினும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இருதரப்புக்கும் சாதகமான ஒரு முடிவை எட்டும் சூழல் உருவானால் கப்பல் விடுவிக்கப்பட்டு, மீண்டும் பயணத்தை தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!