கண்டுகொள்ளாத அரசு: டெல்லி நோக்கி பேரணி நடத்த விவசாயிகள் திட்டம்!

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசுடன் பல கட்டங்களாக விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தன. மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்து உள்ளன.

டெல்லியில் சிங்கு, திக்ரி, காஜிபூர் எல்லைகளில் கூடாரங்களை அமைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். விவசாயிகளின் போராட்டம் இன்று 140-வது நாளாக நீடித்தது.

விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியின் முக்கிய எல்லை பகுதிகள் தொடர்ந்து மூடப்பட்டு உள்ளன. வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. இந்தநிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக வருகிற 21-ந் தேதி டெல்லியை நோக்கி பேரணி நடத்த பஞ்சாப் விவசாயிகள் சங்கம் திட்டமிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதிண்டா பகுதியில் ஜாலியன் வாலாபாக்கில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய பாரதிய கிஷான் யூனியன் அமைப்பை சேர்ந்த பஞ்சாப் மாநில தலைவர் ஜோகிந்தர் சிங் உரிமைகளை அடையும் வரை போராட்டம் தொடரும் என்று கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!