கனடாவை உலுக்கிய கொலை வழக்கு: நீதிபதி வெளியிட்ட அறிக்கை!

கனடாவில், இலங்கையர் ஒருவர் உட்பட மூவர் ஓரினச்சேர்க்கையாளர் ஒருவரால் கொல்லப்பட்ட நிலையில், பொலிசார் சரியாக விசாரணை நடத்தியிருந்தால், மற்றொரு இலங்கையர் உட்பட மேலும் ஐந்துபேரைக் காப்பாற்றியிருக்கலாம் என்கிறார் நீதிபதி ஒருவர். கனடாவின் ரொரன்றோவிலுள்ள ஓரினச்சேர்க்கைக் கிராமம் ஒன்றுடன் தொடர்புடைய ஸ்கந்தராஜ் நவரத்னம், அப்துல் பசிர் ஃபைசி மற்றும் மஜீத் கேஹன் என்னும் மூவர் மர்மமான முறையில் மாயமானபோது, 2012ஆம் ஆண்டு பொலிசார் விசாரணை ஒன்றைத்துவக்கினார்கள்.

ஸ்கந்தராஜ் நவரத்னம் மற்றும் மஜீத் கேஹன் ஆகிய இருவருடனும் புரூஸ் மெக் ஆர்தர் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்ததையடுத்து, 2013ஆம் ஆண்டு அவரை பொலிசார் விசாரணைக்குட்படுத்தினார்கள். ஆனால், 2018வரை அவர் கைது செய்யப்படவேயில்லை.

இதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில், அவர் மேலும் ஐந்து பேரை கொலை செய்துள்ளார். இந்நிலையில், இந்த வழக்கை மீளாய்வு செய்துவரும் நீதிபதியான குளோரியா எப்ஸ்டீன் என்பவர், பொலிசார் அந்த விசாரணையை சரியாக செய்யவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

மூவர் மாயமான வழக்கு ஒன்றில் ஆர்தருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தும், ஆர்தரின் குற்றப்பின்னணி குறித்து பொலிசார் சரியாக ஆராயவில்லை, வழக்கை விசாரித்த அதிகாரி, வழக்கு விசாரணைக்காக முறையாக தயாராகவில்லை என்று நீதிபதி குளோரியா தெரிவித்துள்ளார்.

2003ஆம் ஆண்டு, ஏற்கனவே ஆர்தர் ஒருவரை தாக்கியிருக்கிறார், அதற்காக தண்டிக்கப்பட்டும் இருக்கிறார். விசாரணை அதிகாரி அந்த விடயத்தை ஆராய்ந்திருப்பாரானால், 2001ஆம் ஆண்டு ஆர்தர் ஓரினச்சேர்க்கையாளர் ஒருவரை அந்த கிராமத்தில் வைத்தே தாக்கியதும் அவரது கவனத்தில் வந்திருக்க வாய்ப்புள்ளது.

ஆனால், விசாரணை அதிகாரி இவை எதையுமே ஆராயவில்லை. அவர் இப்படி முக்கியமான பல விடயங்களை கோட்டை விட்டிருக்கிறார்.

அவர் மட்டும் தன் கடமையை சரியாக செய்திருந்தாரானால், கிருஷ்ணராஜ் கனகரத்னம் உட்பட மேலும் ஐந்து பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

ஆக, விசாரணை அதிகாரி தன் பங்குக்கு விசாரணையில் முக்கிய விடயங்களைக் கோட்டை விட்டுள்ளார், அவர் ஒரு ஜூனியர் என்பதால், அவரது மூத்த அதிகாரிகள் அவரது அறிக்கையை மீளாய்வு செய்திருக்கவேண்டும், ஆனால், அவர்களும் கோட்டைவிட்டுவிட்டார்கள் என்கிறார் நீதிபதி குளோரியா.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!