கனடாவில் பெண்ணை மிருகத்தனமாக தாக்கிய பாதுகாவலர்!

சகல மனிதனை மனிதனாக பாவிக்காமல் மிருகத்தைவிடக் கேவலமாக நடத்தும் ஒரு கூட்டம் மனிதர்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். கருப்பினத்தவரை தாக்கும் வெள்ளையர்கள், ஆசியர்களைத் தாக்கும் கருப்பினத்தவர்கள் போல, கனடாவில் பூர்வக்குடியினரை மனிதர்களாகவே மதிக்காத சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இப்போதுதான் கனடா சிறந்த நாடுகள் பட்டியலில் முதலிடம் பெற்றது. அதற்குள் அந்த நற்பெயரைக் கெடுப்பதுபோல் ஒரு மோசமான சம்பவம் அரங்கேறியுள்ளது. Saskatoon பகுதியில் உள்ள மளிகைக் கடை ஒன்றிலிருந்து ஒரு பெண் பொருட்கள் வாங்கிவிட்டு வெளியேறியிருக்கிறார்.

அப்போது அவரை நெருங்கிய ஒருவர் அவரது பையைக் காட்டச் சொல்லியிருக்கிறார். அந்த பெண்ணும் காட்டியிருக்கிறார். அவர் வைத்திருக்கும் பொருட்களுக்கான பில்லைக் காட்டும்படி அவர் கேட்க, அந்த பெண் தான் பில்லை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

உடனே அந்த பெண் திருடியதாக குற்றம் சாட்டி அவரைக் கீழே தள்ளி அவருக்கு கைவிலங்கிட முயற்சித்துள்ளார் அந்த நபர். தான் அந்த மளிகைக்கடையில் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாவலர் என்பதையும் அவர் கூறவில்லை.

அவர் திடீரென அந்த பெண்ணுக்கு விலங்கிட முயற்சிக்க, அந்த பெண் மறுக்க, முரட்டுத்தனமாக அந்த பெண்ணைக் கீழே தள்ளி, அவர் மீது ஏறி அமர்ந்த அந்த பாதுகாவலர், காட்டு மிருகத்தைக் கட்டுப்படுத்த முயல்வதுபோல் முரட்டுத்தனமாக அந்த பெண்ணுக்கு விலங்கிட முயன்றுள்ளார்.

அந்த பெண் பிடிகொடுக்கவே இல்லை. அவரிடமிருந்து அவர் தப்பிச் செல்ல முயன்றும் விடாமல் அவர் துரத்த, அந்த பெண் அந்த நபர் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டுள்ளார்.

சுற்றி நின்ற மக்கள் தாங்கள் பொலிசாரை அழைத்துவிட்டதாக கூறியும், அந்த பெண்ணை விடுமாறு கோரியும் அந்த நபர் கேட்கவில்லை. இந்த போராட்டம் சுமார் 10 நிமிடங்கள் தொடர்ந்துள்ளது. அதன் பின்னரே வந்த பொலிசார், அந்த பெண்ணைக் கைது செய்துள்ளார்கள்.

அவர் மீது திருட்டுக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், முதலுதவி அளிக்க முயன்றபோது, உங்கள் முதலுதவியும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம் என மறுத்துள்ளார் அந்த பெண். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவ, கனடாவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அந்த பெண் ஒரு பூர்வக்குடியினர் என தெரியவரவே பிரச்சினை பெரிதாகியுள்ளது. அந்த பெண் நடத்தப்பட்ட விதம் அருவருப்பானது என்று கூறியுள்ள பூர்வக்குடியினருக்கான துறை அமைச்சர், முறைப்படி விசாரணைக்குப்பின் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், Saskatoon பழங்குடியினர் கவுன்சில், இந்த பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக சட்டத்தரணி ஒருவரை நியமிக்க முன் வந்துள்ள பழங்குடியின தலைவரான Mark Arcand, தான் அந்த வீடியோவைப் பார்த்து கொதித்துப்போயுள்ளதாகவும், அந்த பாதுகாவலர் பணி நீக்கம் செய்யப்படவேண்டும் என்று கோரியுள்ளதுடன், அவர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யவும் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், அந்த பாதுகாவலரை பணிக்கமர்த்தியுள்ள கடையின் உரிமையாளர், தான் அந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், அந்த பாதுகாப்பு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முடித்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!