கொரோனவால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள்: அரசிடம் முன்வைத்த உருக்கமான கோரிக்கை!

தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள 18 இலங்கை தமிழர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் உருக்கமான கோரிக்கையை முன் வைத்துள்ளனர். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 89 பேர் மற்றும் வங்கதேசம், நைஜீரியா, சூடான், பல்கேரியா நாடுகளைச் சேர்ந்த 108 பேர் தற்போது உள்ளனர்.

இந்த நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள வெளிநாட்டினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் முதல்கட்டமாக 40 பேரின் முடிவுகள் வந்துள்ளன. இதில், இலங்கையைச் சேர்ந்த 18 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

சிறப்பு முகாமில் உடனடியாக கொரோனா சிகிச்சை மையத்தை அமைக்க முகாம்வாசிகள் கோரிக்கை விடுத்தனர். உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டினர். இதையடுத்து தொற்று உறுதியாகியுள்ள அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்கள் கூறுகையில்,பொய் வழக்கில் கைது செய்துள்ள தங்களை, தண்டனைக் காலத்திற்கு மேல் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

கொடுமையான கொரோனா காலத்திலாவது தங்களை விடுதலை செய்ய வேண்டும். குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழர்கள் கூறியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!