பெரும்பாலான தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடித்த தி.மு.க!

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிக்கும் கடந்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. கொரோனா பரவலுக்கு இடையே கடும் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த தேர்தல் நடந்தது.

5 முனைப்போட்டி

எந்த தேர்தலிலும் இல்லாத அளவு 5 முனைப்போட்டி நிலவியது. அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு கூட்டணியும் களத்தில் நின்றது.

இதேபோல், அ.ம.மு.க. – தே.மு.தி.க. இணைந்தும், மக்கள் நீதி மய்யம் – சமத்துவ மக்கள் கட்சி சேர்ந்தும் போட்டியிட்டன. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது.

வாக்கு எண்ணிக்கை

இந்தத் தேர்தலில் மொத்தம் 6 கோடியே 25 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் ஓட்டுபோடும் உரிமை பெற்றிருந்தனர். ஆனால், 4 கோடியே 57 லட்சத்து 76 ஆயிரத்து 311 பேர்தான் வாக்களித்தனர். அதாவது, ஆண்கள் 2 கோடியே 26 லட்சத்து 3 ஆயிரத்து 156 பேரும், பெண்கள் 2 கோடியே 31 லட்சத்து 71 ஆயிரத்து 736 பேரும், மூன்றாம் பாலினத்தினர் 1,419 பேரும் ஓட்டுப்போட்டனர். இதில், 5 லட்சத்து 64 ஆயிரத்து 253 தபால் வாக்குகளும் அடங்கும். மொத்தம் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், 5 மாநிலங்களுக்கும் சேர்த்து மே 2-ந்தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று முதலிலேயே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதனால், தேர்தல் முடிந்தும், அதன் முடிவுக்காக 25 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டது.

காலை 8 மணிக்கு தொடங்கியது

இந்த நிலையில், தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 16-வது சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதற்காக தமிழகம் முழுவதும் 75 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தலைநகர் சென்னையில் மட்டும் 3 இடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன.

சரியாக காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணும் பணிக்காக வந்த அலுவலர்கள் காலை 7 மணி முதலே வருகை தந்தனர். அவர்களிடம் கொரோனா ‘‘நெகட்டிவ்’’ சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. அதன்பிறகு, உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து, கைகளில் கிருமிநாசினி தெளித்து, கையுறை மற்றும் முககவசத்துடன் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம்

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. ஆனால், இந்த முறை தபால் வாக்குகள் அதிகம் என்பதால், அவை எண்ணும் பணியில் தொய்வு ஏற்றப்பட்டது. எனவே, அவை ஒரு பக்கம் நடைபெற்றாலும், மற்றொரு பக்கம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வந்து, வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. சில வாக்கு எண்ணும் மையங்களில் மதியம் வரை தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் சுற்றுவாரியாக எண்ணப்பட்டு, உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆரம்பம் முதலே தி.மு.க.வின் கையே ஓங்கியிருந்தது. ஆனால், அ.தி.மு.க.வும் விடாப்பிடியாக தி.மு.க.வை பின்தொடர்ந்தது. என்றாலும், இரண்டு கட்சிகளுக்கு இடையேயான இடைவெளி நேரம் செல்லச்செல்ல அதிகரிக்கத் தொடங்கியது. முன்னணி நிலவரங்களை பார்த்து தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். அ.தி.மு.க. தொண்டர்கள் சோர்வடைந்தனர்.

வெற்றி கொண்டாட்டம்

முழு ஊரடங்கு நாளான நேற்று கட்சி அலுவலகங்களுக்கு முன்பு வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், சென்னை அண்ணா அறிவாலயம் முன்பு கூடிய தி.மு.க. தொண்டர்கள், பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி வெற்றியை கொண்டாடினார்கள். அதே நேரத்தில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் மயான அமைதி நிலவியது.

மதியம் 2.45 மணி முதல் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் பணிகள் தொடங்கின. சிறிய தொகுதிகளுக்கு விரைவாக முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதே நேரத்தில், வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் முடிவுகள்அறிவிக்க சற்று நேரம் பிடித்தது.

தி.மு.க. வெற்றி

என்றாலும், மாலையில் இருந்து வெற்றி அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டே இருந்தன. சில தொகுதிகளுக்கு இரவு வரை வாக்கு எண்ணும் பணிகள் நடந்தது. இந்தத் தேர்தலில், தி.மு.க. கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்று வாகை சூடியது. தி.மு.க. மட்டும் 126 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அ.தி.மு.க. கூட்டணி 76 இடங்களை கைப்பற்றியது. இதில், அ.தி.மு.க. 66 இடங்களிலும், பா.ம.க. 5 இடங்களிலும், பா.ஜ.க. 4 இடங்களிலும் புரட்சி பாரதம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வின் வெற்றி பயணம் முடிவுக்கு வந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. மீண்டும் அரியணை ஏறுகிறது.

மு.க.ஸ்டாலின்முதல்-அமைச்சராகிறார்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் 26-வது முதல்-அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு கட்சியை வழிநடத்தி வரும் அவர், முதல் முறையாக முதல்-அமைச்சர் ஆகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!