அமெரிக்க குடியுரிமையை தூக்கியெறிய தயாரா? – கோத்தாவுக்கு சவால் விடும் அமைச்சர்

கோத்தாபய ராஜபக்ஷ தாய் நாட்டின் மீது உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டிருந்தால் அமெரிக்க பிரஜாவுரிமையை தூக்கி எறிய வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் நேற்று சவால் விடுத்தார்.

தனது சொந்த நாட்டை பொருட்படுத்தாது பிறிதொரு நாட்டின் பிரஜாவுரிமையை பெற்றிருப்பது தார்மீகத்துக்கு எதிரான செயலென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சிறிகொத்தவில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டுமாயின் அமெரிக்க பிரஜாவுரிமையை இரண்டே மாதங்களில் ரத்துச் செய்ய முடியுமென்றும் இல்லையேல் இரத்துச் செய்ய அவசியம் இல்லையென்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தொலைக்காட்சியொன்றுக்கு தெரிவித்திருந்தார்.

இதன்மூலம் அவர் இந்நாட்டின் கடவுச்சீட்டு மற்றும் பிரஜாவுரிமையை பொருட்படுத்தவில்லையென்பது எமக்கு புரிகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!