ஆசியாவிற்கு உலகை வழிநடத்த வேண்டிய பொறுப்பு உள்ளது -பிரதமர்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் குழு தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 54 ஆவது பொதுக் குழுக் கூட்டம் மெய்நிகர் முறையில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது, 2021-2022 ஆண்டிற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் குழு தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் அடுத்த ஆண்டுக்கான 55 ஆவது பொதுக் குழுக் கூட்டம் கொழும்பில் இடம்பெறவுள்ளதாகவும் இதன்போது அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அபிவிருத்தியடைந்துவரும் ஆசியாவிற்கு உலகை வழிநடத்த வேண்டிய பொறுப்பு உள்ளதாக, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 54 ஆவது பொதுக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், காலநிலை மாற்றத்திற்கு ஏற்புடைய சூழலுக்கான நிலையான பயன்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

மேலும், ‘பசுமை பொருளாதாரத்தில்’ சேவை வழங்குவதற்கு டிஜிட்டல் மயமாக்கலின் முக்கியத்துவத்தை இலங்கை ஏற்கனவே அடையாளங்கண்டுள்ளதாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை நோக்கி செல்வதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உறுப்பு நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும் என அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, பெண்களின் அதிகாரமளித்தல் தொடர்பிலும் உரிய அவதானம் செலுத்த வேண்டும் என, அவர் இதன்போது வலியுறுத்தினார்.

அத்துடன், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய உதவிகளுக்கும் அவர் இதன்போது நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!