காங்கேசன்துறை தொகுதியில் 17 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் வெட்டு!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 17,603 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது யாழ். மாவட்டத்தில் நாடாளுமன்ற ஆசனம், பல்கலைக்கழக தெரிவு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.

2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் இறுதி செய்யப்பட்டு கடந்த 30ஆம் திகதி வெளியிடப்பட்டது.

இதன்போது, கடந்த 2019ஆம் ஆண்டு பட்டியலில் நான்கு இலட்சத்து 79 ஆயிரத்து 584 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருந்தனர். தற்போது புதிய பட்டியலில் நான்கு இலட்சத்து 69 ஆயிரத்து 823 ஆக வாக்காளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

முக்கியமாக, காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளடங்கும் 21 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் பெயர் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் 21 ஆயிரத்து 905 பேரின் பெயர் நீக்கப்பட்டது.

இதையடுத்து, குறித்த மக்கள் எந்தப் பிரதேசத்தில் வசித்தாலும் தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்ததுடன் யாழ்ப்பாண மாவட்டத் தேர்தல் திணைக்களம் சிறப்பு நடவடிக்கைகள் சிலவற்றையும் முன்னெடுத்திருந்தது.

அத்துடன், பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு வாக்காளர் பதிவு விண்ணப்பங்கள் கையளிக்கப்பட்டன. அத்துடன், பொது அமைப்புக்கள், கிராம சேவையாளர்கள் ஊடாகப் பதிவுக்கான கோரிக்கைகள் அனுப்பப்பட்டன.

இதனடிப்படையில், பெயர் நீக்கம் செய்யப்பட்ட 21ஆயிரத்து 905 பேரில் வெறும் நான்காயிரத்து 302 பேர் மாத்திரமே தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனால், பதிவுகளை மேற்கொள்ளாத 17ஆயிரத்து 603 பேரின் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடங்கும் கிளிநொச்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு 92ஆயிரத்து 264 பேர் வாக்காளராகப் பதிவாகியிருந்த நிலையில், 2020ஆம் ஆண்டு 93 ஆயிரத்து 370 பேராக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!