இடைமறித்த ஈரான், எச்சரித்த அமெரிக்கா: அதிகரிக்கும் பதற்றம்!

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, பாரசீக வளைகுடா பகுதியில் சர்வதேச கடற்பரப்பிற்கும், ஈரானின் கடற்பரப்பிற்கும் இடையேயான மிகவும் குறுகலான ஹார்முஸ் ஜலசந்தியில் பல முறை அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரானின் கடல் எல்லை அருகே அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நேற்று அமெரிக்க கப்பல்கள் வழக்கமான ரோந்துபணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அந்த கப்பல்களுக்கு பாதுகாப்பாக அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்தனர்.

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் கடல் எல்லைக்கு அருகே சர்வதேச எல்லைப்பகுதியில் அமெரிக்க கப்பல்கள் பயணித்துக்கொண்டிருந்தபோது ஈரான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான அதிவிரைவு படகுகள் அமெரிக்க கப்பலை இடைமறித்தன. மேலும், அமெரிக்க கப்பலை ஒன்றுக்கும் மேற்பட்ட ஈரானிய படகுகள் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டன.

இதனை தொடர்ந்து ரோந்து கப்பல்களுக்கு பாதுகாப்பாக வந்து கொண்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஈரானிய படகுகளை எச்சரிக்கும் வகையில் 30 முறை துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு பின்னர் அமெரிக்க கப்பலை விட்டு விலகி ஹார்முஸ் ஜலசந்தியை விட்டு ஈரான் கடற்படை படகுகள் விலகி சென்றதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ரோந்து கப்பலை இடைமறித்ததாக ஈரான் படகுகளை எச்சரிக்கும் வகையில் அமெரிக்க கடற்படை கப்பல் 30 முறை துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!