காஷ்மீரில் பத்திரிகையாளரை கொன்றது லஷ்கர் பயங்கரவாதிகள்

பத்திரிகையாளர் சுஜாத் புகாரியை லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதாகவும், அவரை கொலை செய்ய பாகிஸ்தானில் சதி திட்டம் தீட்டப்பட்டதாக காஷ்மீர் மாநில போலீஸ் ஐ.ஜி. எஸ்.பி. பானி தெரிவித்துள்ளார்.

காஷ்மீரை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் சுஜாத்புகாரி.

ரைசிங் காஷ்மீர் என்ற பத்திரிகையில் பணியாற்றும் அவரை பயங்கரவாதிகள் கடந்த 14-ந்தேதி சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பத்திரிகையாளர் சுஜாத் புகாரியை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதாகவும், அவரை கொலை செய்ய பாகிஸ்தானில் சதி திட்டம் தீட்டப்பட்டதாக காஷ்மீர் மாநில போலீஸ் ஐ.ஜி. எஸ்.பி. பானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

சுஜாத் புகாரியை கொல்வதற்கு பாகிஸ்தானில் சதி திட்டம் தீட்டப்பட்டது. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் இந்த திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார்கள்.

ஷேக்சாஜித்குல், முசாபர் அகமது பட், ஆசாத் அகமது மாலிக், நவீத் ஜட் ஆகிய 4 பயங்கரவாதிகள் அவரை சுட்டுக் கொன்று உள்ளனர். இதில் நவீத்ஜட் பாகிஸ்தானை சேர்ந்தவன். மற்ற 3 பேரும் காஷ்மீரை சேர்ந்தவர்கள், இந்த 4 பேருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளன. தீவிர விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சுஜாத் புகாரியை கொன்றதாக சந்தேகிக்கப்படும் லஷ்கர் அமைப்பை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் புகைப்படங்களையும் காஷ்மீர் போலீசார் வெளியிட்டு உள்ளனர்.

இதில் சஜத்குல் என்பவர் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். 2002-ம் ஆண்டு பயங்கர வெடி குண்டுகளுடன் போலீசார் டெல்லியில் கைது செய்து இருந்தனர். அதன் பிறகு 2016-ம் ஆண்டிலும் கைதாகி இருந்தான். கடந்த ஆண்டு மார்ச் மாதம் போலி பாஸ்போர்ட்டு மூலம் பாகிஸ்தானுக்கு தப்பி ஓடினான். அவனை பிடிக்க சர்வதேச போலீஸ் உதவியை நாட இருப்பதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே பத்திரிகையாளர் சுஜாத் புகாரியை நாங்கள் கொல்லவில்லை என்று லஷ்கர்-இ- தொய்பா அமைப்பு மறுத்து உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!