தயங்கும் அரசு: அதிகரிக்கும் உயிர் பலி!

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின், ஆட்சியில் அமர்ந்திருப்பதால், மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்பட்டு விடக் கூடாது என்கிற எண்ணத்தில், முழு ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த, தி.மு.க., அரசு தயங்குகிறது. கொரோனா பரவல் கட்டுப்படுத்த தீவிரம் காட்டாமல், அஜாக்கிரதையாக செயல்படுவதால், உயிர் பலி தொடர்கிறது.கோவை மாவட்டத்தில், ஒரு நாள் கொரோனா பாதிப்பு, 2,500ஐ கடந்து விட்டது. மாநகராட்சி பகுதியில்தான் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர, 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதேநேரம் வர்த்தகர்களின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என்று கூறி, மளிகை, காய்கறி, இறைச்சி, தேநீர் கடைகளை, மதியம், 12:00 மணி வரை திறந்திருக்க, தமிழக அரசு அனுமதித்திருக்கிறது.ஓட்டல்கள், இரவு, 9:00 மணி வரை செயல்படலாம் என்றும் சலுகையை அதிகப்படியாக வழங்கியிருக்கிறது. 50 சதவீத தொழிலாளர்களுடன் தொழிற்சாலைகள் இயங்கலாம் என்றும் தெரிவித்திருக்கிறது.

இத்தகைய சலுகைகள் காரணமாக, தினந்தோறும் நுாற்றுக் கணக்கானோர், இரு சக்கர வாகனங்களில், மார்க்கெட்டுக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மவுனம் சாதிப்பதால், இரவு, 10:00 மணியானாலும் மக்கள் ஜாலியாக சென்று வருகின்றனர். இது, தொற்று பரவல் மேலும் அதிகரிக்கவே வாய்ப்பாக அமைந்தள்ளது.அதனால், கடந்தாண்டு, மார்ச் மாதம் கொரோனா பரவ ஆரம்பித்ததும் எத்தகைய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதோ, அதுபோன்ற நடைமுறையை இப்போது மீண்டும் பின்பற்ற வேண்டும் என, மருத்துவத்துறையினர் மன்றாடி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், தி.மு.க., ஆட்சியில் அமர்ந்ததும், ஊரடங்கை அமல்படுத்தி விட்டது; மக்களை கஷ்டப்படுத்துகிறது என்கிற அவப்பெயர் வந்து விடக்கூடாது என்கிற எண்ணத்தில், ஒவ்வொரு நாளும் ஊரடங்கிலும் புதுசு புதுசாக சலுகைகளை அறிவித்து, தவறான பாதையில் பயணிக்கிறது.கொரோனா பரவலை தடுப்பதை, தி.மு.க., அரசு மிகவும் அஜாக்கிரதையாக கையாள்வதால், மருத்துவத்துறையினர் நொந்து போயுள்ளனர். உயிர் பலி தினமும் தொடர்கிறது. போலீசாருக்கு சுதந்திரம் வழங்கி, வாகன போக்குவரத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும். மருத்துவ உதவி தேவையில்லாதவர்கள், வெளியே வராமல் வீட்டுக்குள் தனித்திருந்தால் மட்டுமே, மற்றவர்களுக்கு பரவாமல், கொரோனா சங்கிலி அறுபடும்.

அதற்கு தேவை, தி.மு.க., அரசின் துணிச்சலான நடவடிக்கை.நேற்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழப்பு : கொரோனா தொற்று, ஆக்சிஜன் பற்றாக்குறையால், கோவை மாவட்டத்தில் உயிரிழப்பு தொடர்கிறது. இம்மாதத்தில், கடந்த, 9ம் தேதி முதல் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில், 18 பேர் இறந்தனர். கடந்த, 12 நாட்களில் மட்டும், 89 பேர் உயிரிழந்திருப்பதாக, மாவட்ட நிர்வாகம், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றால், இதுவரை, 810 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர, தொற்று குணமாகி, இணை நோயால் இறந்தவர்கள் ஏராளம்.இதர மாவட்டங்களில் இருந்து, கோவை மருத்துவ மனைகளுக்கு வந்து, சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் எக்கச்சக்கம். அந்த உயிரிழப்புகளை சேர்த்தால், மிகப்பெரிய எண்ணிக்கை வரும் என்பதால், அந்தந்த மாவட்டங்களின் கணக்கில் சேர்க்கப்படுகின்றன.

திருப்பூரை பின்பற்றுமா கோவை!தொழிற்சாலைகள், 50 சதவீத தொழிலாளர் களுடன் இயங்கலாம் என, தமிழக அரசு சலுகை காட்டி இருப்பினும், கொரோனா பரவலை தடுக்கவும், தொழிலாளர்களின் உயிரை காக்கவும், முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களை, 24ம் தேதி வரை மூட, ஏற்றுமதியாளர்கள் முடிவு செய்திருக்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினர், ஓட்டல் உரிமையாளர் கள் சங்கத்தினர், காய்கறி, இறைச்சி மற்றும் மளிகை வியாபாரிகள் சங்கத்தினர், சூழ்நிலையை புரிந்து, தாமாக முன்வந்து, சுயகட்டுப்பாடுகளுடன், ஊரடங்கில் பங்கேற்க வேண்டும். வர்த்தகம் எப்போது வேண்டுமானலும் செய்யலாம்; உயிரும், உறவும் முக்கியம் என்பதை ஒவ்வொரு தரப்பினரும் உணர வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!