கங்கை நதிக்கரையில் புதைக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட சடலங்கள்: அதிர்ச்சியில் மக்கள்!

இந்தியாவின் கங்கை கரையில் 300-க்கும் மேற்பட்ட சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பது, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக, இந்தியாவில் மக்கள் கொத்து கொத்தாக பலியாகி வருவதால், நாடு முழுவதும் மயானங்களில் சடலங்களை எரியூட்ட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

பல மாநிலங்களில் மயானத்தின் வாசலில் மணிக்கணக்கில் சடலங்கள் வரிசையில் காத்திருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் உத்தரப்பிரதேசத்தின் எல்லையை ஒட்டிய, பீகாரின் பக்சர் மாவட்டத்திலும், உத்தரப்பிரதேசத்தின் காஜிபூர் மாவட்டத்திலும் கங்கை நதிக் கரையில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்தது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் புக்சர் மற்றும் ரவுதாபூர் ஆகிய கிராமங்களில் கங்கை கரையில் தொடர்ந்து சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வீடியோ பதிவுகள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. கடந்த மாதம் மட்டும் கங்கை கரை மணற்பரப்பில் 300 சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது கொரோனா பலி அதிகரித்து வரும் நிலையில், சடலங்களை எரியூட்ட செலவு அதிகரித்துள்ளது. மேலும், மரக்கட்டைகள் கிடைக்காததால், சடலங்களை கிராம மக்கள் புதைத்து வருவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு புதைக்கப்படும் சடலங்களை நாய்கள் தோண்டி கடித்து குதறி வரும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இனி அங்கும் சடலங்களை புதைக்க முடியாத அளவுக்கு முழு கரையும் நிரம்பி உள்ளது.

இதனால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கொரோனா ஆரம்ப கட்டத்தில் தினமும் இரண்டு முதல் மூன்று சடலங்கள் மட்டுமே இங்கு வந்து கொண்டிருந்தன.

இப்போது தினமும் சராசரியாக 10 முதல் 12 சடலங்கள் வருகின்றன. அவற்றில் ஒருசிலர் மட்டுமே எரிக்கின்றன. வசதியில்லாத நிறைய பேர் சடலங்களை புதைத்து விட்டு செல்கின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று வேதனையுடன் கூறியுள்ளனர்.\

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!