சுகாதார அமைச்சின் அனுமதியுடனேயே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்

சுகாதார அமைச்சினூடாக அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரேனா பரவலையடுத்து பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 17 ஆம் திகதி பயணத்தடை அகற்றப்படவுள்ளதாகவும் தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு அமைய பொது மக்கள் நடமாட்டத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நேற்றைய தினம் எமது செய்தி பிரிவிற்கு அறிவித்தார்.

இந்நிலையில், பாடசாலைகள் ஆரம்பிப்பது குறித்து ஏதேனும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா என கெப்பிடல் செய்தி பிரிவு கல்வி அமைச்சின் கடமை நேர அதிகாரி ஒருவரிடம் வினவியது.

இதற்கு பதிலளித்த அவர், மாணவர்களின் கல்வியில் அரசாங்கம் அக்கறையுடன் செயற்படுகின்றது. அதேபோன்று அவர்களின் சுகாதாரம், ஆரோக்கியம், ஜீவனோபாய பாதுகாப்பு குறித்தும் அக்கறை கொண்டுள்ளது.

கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொட்பில் தன்னிச்சியாக தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது.

ஆகையினால் சுகாதார அமைச்சின் அனுமதியினை தொடர்ந்தே பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாட முடியும்.

சூம் தொழிநுட்பத்தினை பயன்படுத்த முடியாத மாணவர்கள் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

கையடக்க தொலைபேசிகளில் கவரேஜ் இல்லையாயின் மாணவர்கள் கட்டிடங்கள் மற்றும் ஏனைய உயரமான பகுதிகளுக்கு கையடக்க தொலைபேசிகளை எடுத்துச்சென்று கற்க முயற்சிக்கின்றனர்.

இந்த நடவடிக்கை உரிய பாதுகாப்பினை அளிக்காது என்பதால் அதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அத்துடன், இலங்கையில் இதுவரை எந்தவொரு பாடசாலையும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாகவோ அல்லது சிகிச்சை நிலையமாகவோ பயன்படுத்தவில்லை என கல்வி அமைச்சின் கடமை நேர அதிகாரி எமது செய்திப்பிரிவிற்கு கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!