தமிழினத்தின் தணியாத விடுதலை உணர்வை வெளிப்படுத்துவோம்!

அரசாங்கத்தினால் கட்டவிழ்த்து விடப்பட்ட கடும்போக்குவாதம் தமிழினத்தை தளர்வடைய செய்யாது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி வி கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவுத் துாபி உடைக்கப்பட்டமை குறித்து அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதி என்பது சிங்கள இனவெறி அரசாங்கத்தின் தமிழின அழிப்பின் உச்சம் தொட்ட நினைவுநாள் எனவும் கூறியுள்ளார்.

மனிதர்கள் கொல்லப்பட்டாலும் வரலாறு கொல்லப்பட முடியாதது என்பதை நினைவு கூரும் நாளே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினமாகும் என வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் சுட்டிக்காட்டியுள்ளார்.

2010 ஆம் ஆண்டு முதல் இனவெறி அரசாங்கங்களின் தடைகள் மற்றும் இடையூறுகளை மீறியும் தாண்டியும் தமிழ் மக்கள் அனைவரும் பல்வேறு வழிகளில் முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவுகூர்ந்திருந்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் ஒரு அடையாளமாகவே முள்ளிவாய்க்கால் மண்ணில் எளிமையான நினைவுத்தூபி நிறுவப்பட்டது எனவும் நினைவேந்தல் நிகழ்வுகளை தடுத்து வந்த அரசாங்கம் தற்போது அந்த நினைவுத் தூபியையும் இரவோடு இரவாக இடித்தழித்து விட்டுள்ளதாகவும் சி.வி.கே.சிவஞானம் சுட்டிக்காட்டியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தை முழுமையாக ஆக்கிரமித்துள்ள இராணுவம், நினைவுத்தூபி அழித்தது பற்றி தமக்கு தெரியாது எனவும் அதற்கான தேவை தமக்கு இல்லை என கூறிவருகின்றமை குறித்தும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

கல்லாலும் மண்ணாலும் சிமெந்தாலும் அமைந்த நினைவுத்தூபியை அழிக்கலாம் என்ற போதிலும் கல்லுப்போல ஒவ்வொரு தமிழன் மனதிலும் ஆழ பதிந்த நினைவையும் வரலாற்றையும் தமிழினம் இருக்கும் வரை அழிக்க முடியாது எனவும் சி.வி.கே.சிவஞானம் சூளுரைத்துள்ளார்.

இதனை இனவாத சிங்கள தேசம் புரிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், நிகழ்கால அரசாங்கம் பதவிக்கு வந்தது முதல் கட்டவிழ்த்துவிட்ட கடும்போக்குவாத செயற்பாடுகளால் தமிழினம் சோர்வடையவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில் இவ்வாண்டும் எதிர்வரும் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிக்கு தமது இல்லங்கள் ஒவ்வொன்றிலும் பகிரங்கமாக தீபங்கள் ஏற்றி அநியாயமாக கொல்லப்பட்ட எமது உறவுகள் அனைவரையும் நினைவு கூர வேண்டும் என சி.வி.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்ஊடாக தமிழினத்தின் தணியாத விடுதலை உணர்வை வெளிப்படுத்தி நிற்போம்’ எனவும் சி வி கே சிவஞானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.