ரிஷாட் பதியூதீனை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வர அனுமதி!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், நாளை பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கான அனுமதியை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வழங்கியுள்ளார்.

ரிஷாட் பதியூதீன் கோரிக்கை விடுத்தால் மாத்திரமே அவரை பாராளுமன்றத்துக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளார்.

ரிஷாட்டை பாராளுமன்றத்துக்கு அழைத்து வரும்போது, சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை சி.ஐ.டியினர் பின்பற்ற வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, மரணதண்டனைக் கைதியான பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவும் கோரிக்கை விடுத்தால், அவரையும் பாராளுமன்றத்துக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சிறைச்சாலை அதிகாரிகளுக்குப் படைக்கல சேவிதரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பாராளுமன்ற அமர்வில் ரிஷாட் கலந்து கொள்வாரென எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும் அவர் அழைத்து வரப்படவில்லை. இதனால், பாராளுமன்றில் எதிர்க்கட்சியினருக்கும் ஆளுங்கட்சியினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!