இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: வீட்டின் இடிபாடுகளுக்குள் சிக்கிய சிறுமி 7 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு!

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் வீட்டின் இடிபாடுகளுக்குள் சுமார் 7 மணி நேரம் சிக்கியிருந்த சிறுமி உயிருடன் மீட்கப்படும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது. கடந்த சில நாட்களாகவே காசா பகுதியை நோக்கி, இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. ஏனெனில், காசா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளதால், காசா முனையை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. மேற்குகரை பகுதியின் பாலஸ்தீன அதிபராக முகமது அப்பாஸ் செயல்பட்டு வருகிறார். மேற்குகரையின் சில பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம். ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவமும் அவ்வப்போது பதிலடி கொடுத்து வரும்.

இந்நிலையில், ஜெருசலேமில் உள்ள பாலத்தீன மக்கள் தொழுகை நடத்தும் அல் அக்சா மசுதிக்குள் புகுந்து இஸ்ரேல் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேலுக்குள் காசாவில் உள்ள ஹமாஸ் போர்ப்படை தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் காசாவில் கடந்த சில நாட்களாக ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. அப்படி கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை, காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், ஏராளமானோர் உயிரிழந்தனர்.

குழந்தைகள் 42 பேர் உட்பட கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் இந்த தாக்குதலால், இதுவரை 190-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் வீடு ஒன்று முற்றிலும் தரைமட்டமானது.

இந்த கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கிய 6 வயது சிறுமி ஒருவர் பல மணி நேரமாக உயிர் பிழைக்க போராடினார். இந்த தாக்குதலில் அவரின் தாயார் மற்றும் உடன் பிறந்த நான்கு பேர் உயிரிழந்துவிட்டனர்.

அவரின் தந்தை மட்டும், உயிருடன் இருந்தார். அப்போது அவர் தன் மகளை காப்பாற்றுவதற்கு போராடினார். உடன் இருந்த மீட்பு படையினரும், அந்த இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த இந்த சிறுமியை வெளியில் கொண்டு வர போராடினர். ஒரு வழியாக 7 மணி நேரத்திற்கு பின் அந்த சிறுமி காயங்களுடன் உயிருடன் வெளியில் கொண்டு வர, தந்தை தன் மகளை கட்டியணைத்துக் கொண்டு, கதறி அழுத படி, ஆம்புலன்ஸை நோக்கி ஓடினார்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்போது அவர் தன் மகளின் கையை பாசத்தோடு முத்தமிட்ட படி பார்த்தார். இந்த புகைப்படம் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும், இஸ்ரேல் ஹமாஸ் என்ற பயங்கரவாத அமைப்பை நோக்கி தாக்குதல் நடத்தினாலும், இதில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்படுகின்றனர்.

இது பலருக்கும் வேதனையை கொடுக்கும் நிலையில், இதற்கு எல்லாம் ஹமாஸ் அமைப்பு தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். இது போன்ற உயிரிழப்புகள் ஏற்பட நாங்கள் காரணம் இல்லை, அவர்கள் பொது மக்கள் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி, நாங்கள் அவர்களை நோக்கி தாக்குதல் நடத்தப்படும் போது, சில கட்டிடங்கள் இதில் சிக்கி உயிரிழப்புக்கு வழி வகுத்து விடுகிறது என்று கூறியுள்ளார்.