யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் இன்றும் பல பகுதிகளில்

நாட்டில் யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் நிறைவு பெறுகின்ற நிலையில், வடக்கின் சில பகுதிகளில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதன்படி, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தின் ஒரு பகுதியில் இன்று நினைவேந்தல் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு ,புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளை பொலிஸ் பிரிவுகள், நேற்று இரவு முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இராணுவம் ,பொலிஸார் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே, குறித்த நிகழ்வு இடம்பெற்றதாகவும், ஒருவர் மாத்திரமே இதில் கலந்து கொண்டிருந்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அலுவலகத்திலும், நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை, யுத்தத்தில் உயிரிழந்வர்களை நினைவு கூறும் வகையில், வவுனியா, குட்செட் கருமாரி அம்மன் தேவாலயத்திலும் இன்று பிரார்த்தனை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதன்படி, சுகாதார விதிமுறைகளுக்கு அமைய, இந்த நிகழ்வு இடம்பெற்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்

இதேவேளை, அடுத்த தலைமுறையின் எழுச்சியே உயிர்நீத்தவர்களின் ஆத்ம சாந்திக்கு வித்திடும் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தினால் உயிரிழந்தவர்களை இன்று நினைவு கூரும் வகையில், ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

இதன்படி, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு என்பவற்றின் ஊடாகவே மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தத்தில் உயிர்நீத்தவர்களின் ஆத்ம சாந்திக்கு வித்திட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மாக்கள் சாந்தியடைய வீட்டிலிருந்தே நினைவு கூறி இறைவனைப் பிரார்திக்குமாறு நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் ராமநாதன் மேலும் அறிவித்துள்ளார்.

இதேவேளை, யுத்த வெற்றியின் மூலம் வட கிழக்கு மக்களின் அகதி வாழ்வை நிறைவு செய்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

நாட்டில் யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு இன்றுடன் 12 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே, பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்

இதேவேளை, யுத்த நிறைவு முன்னிட்டு இராணுவத்தினரை கௌரவப்படுத்தும் வகையில், பல்வேறு இராணுவ உறுப்பினர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதியின் பரிந்துரையின் பிரகாரம், நான்காயிரத்து 289 இராணுவ உறுப்பினர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!