தேசிய அடையாள அட்டை இலக்கம் செல்லுப்படியாகாது – முழு நேர பயணத்தடை அமுலில்

நாடளாவிய ரீதியில் நேற்று இரவு 11 மணி முதல் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது

இதன்படி, எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை இந்தப் பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன், 25 ஆம் திகதி இரவு 11 மணிமுதல் 28 ஆம் திகதி அதிகாலை நான்கு மணி வரையில் மீண்டும் பயணத்தடை அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முழுநேர பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அடையாள அட்டை இலக்கத்திற்கு அமைய வெளியில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன், பயணக் கட்டுப்பாடுகளை மீறி செயற்படும் நபர்களைக் கண்காணிக்க 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி முதல், 19 மணித்தியாலங்களுக்கு நாடு தற்காலிகமாக திறப்படுகின்ற நிலையில், குறித்த தினத்தில் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே வெளியே செல்ல வேண்டும் எனவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக் கொண்டார்.

25 ஆம் திகதி ஒற்றை இலக்கம் என்ற காரணத்தினால், தேசிய அடையாள அட்டையின் இறுதியில், ஒற்றை இலக்கத்தைக் கொண்டவர்கள் மாத்திரம் வெளியே செல்லுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

இந்த நிலையில், பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில், பேருந்து மற்றும் ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி முதல் இரவு 11.00 மணிவரையிலான காலப்பகுதியில், மாகாணங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாத்திரம், பேருந்து மற்றும் ரயில்சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டார்

எனினும், குறித்த காலப்பகுதியில், மாகாணங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பயணக் கட்டுப்பாட்டினால் மக்கள் மற்றும் பொருளதாரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார்.

பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் தொழிற்சாலைகளை நடத்திச் செல்லுதல்,மருந்தகங்களை திறந்து வைத்தல், பேக்கரி உற்பத்திகளை மேற்கொள்ளுதல் மற்றும் விநியோகிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தல்,சரக்கு கப்பற் சேவை நிறுவனங்களின் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கவும் ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது,

கொவிட் 19 தடுப்பு செயலணி மற்றும் ஜனாதிபதிக்கிடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்தார்.

பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் தொழிற்சாலைகளை நடத்திச் செல்லுதல்,மருந்தகங்களை திறந்து வைத்தல்,பேக்கரி உற்பத்திகளை மேற்கொள்ளுதல் மற்றும் விநியோகிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தல்,சரக்கு கப்பற் சேவை நிறுவனங்களின் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க இதன் போது ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது,

மேலும் பிரதேச நடமாடும் சேவைகளின் ஊடாக மக்களுக்கான அத்தியவசிய உணவுப்பொருட்களை மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!