பரிசோதனை தடைப்பட்டமைக்கு யார் பொறுப்பு?

யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் பிசிஆர் பரிசோதனைகள் தடைப்பட்டுள்ளமைக்கு வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் அசமந்தமான செயற்பாடுகளே காரணம் என வெளிவந்த செய்திகளை வட மாகாண சுகாதார சேவைகள் பணிமனை நிராகரித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக மருத்துவ பீடத்தின் பிசிஆர் இயந்திரத்திற்குரிய குறிப்பிட்ட ஒரு இராசாயன பொருளின் கையிருப்பு இல்லாது போயுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது எனவும் பணிமனை சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் குறிப்பிட்ட இராசாயனப் பொருளை வழங்கும் விநியோக நிறுவனத்தால் இன்று வரை அதனை வழங்க முடியாமல் உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர். கேதீஸ்வரன் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இராசாயானப் பொருளை பெறுவதற்கு வடமாகாண சுகாதார திணைக்களமும் சுகாதார அமைச்சும் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த இராசாயனப் பொருள் விநியோக நிறுவனத்திடம் இருந்து கிடைத்ததும் மருத்துவ பீடத்தின் பிசிஆர் பரிசோதனைகளை மீள ஆரம்பிக்க முடியும் என அவர் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!