சிறுபான்மையினரின் மனித உரிமை விவகாரங்களில் அரசாங்கம் உரிய முனைப்பை காண்பிக்கத் தவறியுள்ளதாக ஐ. நா. இணைக்குழு குற்றச்சாட்டு

UN Logo
இலங்கை, இதுவரை முக்கிய பிரச்சினைகளில் முன்னேற்றம் அடையாமை குறித்து தாம் கவலையடைவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பான இணைக் குழு தெரிவித்துள்ளது

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பான இணைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிப்பட்டுள்ளது.

இதன்படி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46 இன் கீழ் 1 தீர்மானத்திற்கு அமைய, இலங்கையில் அடையாளங் காணப்பட்ட மனித உரிமை விவகாரங்களில் எதிர்பார்க்கப்பட்ட முன்னேற்றம் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடா, ஜேர்மன், வடக்கு மெசிடோனியா, மலாவி, Montenegro மற்றும் பிரித்தானியா ஆகிய இணைக்குழு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

சிறுபான்மை இனத்தவர்களின் மனித உரிமை விவகாரங்களில் அரசாங்கம் உரிய முனைப்பை காண்பிக்கத் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

மேலும், குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும், பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் விதம் குறித்து தாம் கூடிய கவனம் செலுத்தியுள்ளதாகவும் இலங்கை தொடர்பான இணைக் குழு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், ஆசிரியர் அனாப் ஜாசீம் ஆகியோர் குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தியே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறுபான்மை சமூக அரசியல் தலைவர்களும் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்படும் மரணங்கள் தொடர்பில், பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையுடன் தாமும் இணைந்து கொள்வதாக ஐக்கிய நாடுகளின் இலங்கை குறித்த இணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!