மும்பை தாக்குதல் சதிகாரன் ஹபீஸ் சயீத் வீட்டின் வெளியே குண்டுவெடிப்பு – 3 பேர் பலி

மும்பை தாக்குதலில் தொடர்புடைய ஹபீஸ் சயீத், தற்போது லாகூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் புகுந்து குண்டுகளை வெடித்தும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் கொடூரமான தாக்குதல்களை நடத்தினர். இதில் 166 அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதல்களுக்கு பின்னணியில் இருந்தவர் ஹபீஸ் சயீத். இவர், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் இணை நிறுவனர் மற்றும் ஜமாத் உத்த தவா அமைப்பின் நிறுவனர். இவரது வீடு, பாகிஸ்தானில் லாகூரில் ஜோஹார் டவுன் பகுதியில் உள்ளது.

இவரது வீட்டின் வெளியே நேற்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் அந்தப் பகுதியே அதிர்ந்தது.

இதில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். ஹபீஸ் சயீத், தற்போது லாகூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!