அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் ஜனாதிபதி!

துமிந்த சில்வாவின் விடுதலையில் ஜனாதிபதி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். சேதனப் குப்பைகளை இயற்கை உரமாக உற்பத்தி செய்யும் தொழிற்சாலை தொடங்கி வைக்கும் நிகழ்வில் நேற்று பங்குபற்றிய அவர் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

“2017 இல் இது ஆரம்பிக்கப்பட்டது. இது முக்கியமான ஒரு திட்டமாகும். குப்பையை சிறப்பாக முகாமை செய்வதற்கு இந்த திட்டம் உருவானது. யாழ் மாநகர சபை இந்த திட்டத்தை தங்களுக்கு வேண்டும் என்று நின்ற போது அதனை நாம் எதிர்த்து கரவெட்டியில் இதனை செய்யும் போதே பல பிரதேச சபைகள் பயனடையும் என்றும் யாழ் மாநகர சபைக்கு மாற்றுத்திட்டம் ஒன்றை வழங்குவோம் என்று தெரிவித்து, கரவெட்டி பிரதேச சபையில் அதனை உருவாக்கினோம்.

சென்ற ஆட்சிக் காலத்தில் நாம் இணைந்து செய்த இந்த திட்டம் நிறைவேறியது எமக்கு மகிழ்ச்சி என்றார். அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போது, 16 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை உண்மையில் மகிழ்ச்சியான ஒரு விடயம்.

என்ன அடிப்படையில் மற்றவர்களை விடுதலை செய்யவில்லை என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் துமிந்த சில்வாவை சாட்டோடு சாட்டாக விட்டது கண்டனத்துக்குரியது. இது நீதிமன்ற சுயாதீனத்தை கேள்விக்கு உட்படுத்துகின்றது.

ஜனாதிபதி தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்றார்.

ஆனந்த சுதாகரின் பிள்ளைகளுடன் கலந்துரையாடிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவரின் விடுதலைக்காக நாங்கள் குரல் கொடுப்போம் என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!