“தமிழின் மீதான என் முயற்சிகள், அன்பு ஒரு போதும் குறையாது” – பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

பிரதமர் மோடி நேற்று ‘மன்கிபாத்’ (‘மனதின் குரல்’) நிகழ்ச்சியில் பேசும்போது நமது தமிழ் மொழியைப் பற்றியும், அதன் சிறப்பு பற்றியும் பேசினார். சென்னையை சேர்ந்த ஆர்.குருபிரசாத் என்பவர் தனது தளத்தில் வெளியிட்டிருந்த பதிவை குறிப்பிடுகிறபோது, சிலிர்த்துப்போனார். அப்போது அவர் கூறியதாவது:-

‘மன்கிபாத்’ நிகழ்ச்சியின் சிறப்பான விஷயம் என்னவென்றால், என்னை விட நீங்கள் அனைவரும் இதற்கு பங்களிப்பு செய்கிறீர்கள் என்பதுதான்.

சென்னையைச் சேர்ந்த ஆர். குருபிரசாத் அரசின் இணையதள பக்கத்தில் பதிவிட்டிருந்ததை நான் பார்த்தேன். அதைப்பற்றி தெரிந்துகொள்கிறபோது, நீங்களும் மகிழ்வீர்கள். அவர் ‘மன்கிபாத்’ நிகழ்ச்சியை தொடர்ந்து கேட்டு வருபவர் என குறிப்பிட்டுள்ளார். அவரது கடிதத்தில் இருந்து சில வரிகளை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

“ நீங்கள் எப்போதெல்லாம் தமிழ்நாட்டைப்பற்றி பேசுகிறீர்களோ, அப்போதெல்லாம் என் ஆர்வம் இன்னும் கூடுகிறது. தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாசாரத்தின் மகோன்னதம், தமிழ் பண்டிகைகள், தமிழ்நாட்டின் முக்கிய இடங்கள் குறித்தெல்லாம் நீங்கள் கூறி இருக்கிறீர்கள்.

‘மன்கிபாத்’தில் நீங்கள் பல முறை தமிழ்நாட்டு மக்களின் சாதனைகள் குறித்து பேசி இருக்கிறீர்கள். திருக்குறள் மீதான உங்கள் அன்பு மற்றும் திருவள்ளுவர் மீதான மரியாதையைப் பற்றி என்ன கூறுவீர்கள்? எனவே நான் நீங்கள் ‘மன்கிபாத்’தில் தமிழ்நாட்டைப்பற்றி பேசியதையெல்லாம் ஒரு இ-புத்தகமாக தொகுத்திருக்கிறேன். இதுபற்றி நீங்கள் ஏதாவது சொல்வீர்களா? ‘நமோ செயலி’யில் இதை வெளியிடுவீர்களா ? நன்றி”.

உங்களுக்காக குருபிரசாத் கடிதத்தை வாசித்தேன்.

குருபிரசாத், உங்களின் இந்த பதிவை வாசித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இப்போது நீங்கள் இ புத்தகத்தில் மற்றொரு பக்கத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்.

எனது தமிழ் உச்சரிப்பில் தவறு இருக்கக்கூடும். ஆனால் தமிழின் மீதான என் முயற்சிகள், அன்பு ஒரு போதும் குறையாது.

நான் குருபிரசாத்துக்கு கூறியதை தமிழ் பேசாதவர்களுக்கு கூற விரும்புகிறேன். நான் தமிழ் கலாசாரத்தின் மாபெரும் அபிமானி. நான் தமிழின் மாபெரும் அபிமானி. தமிழ், உலகின் மிகப்பழமையான மொழி. ஒவ்வொரு இந்தியரும், உலகின் மிகப்பழமையான மொழி நம் நாட்டுக்கு சொந்தமானது என்பதில் பெருமை கொள்ளுங்கள். தமிழில் நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

குரு பிரசாத்தின் இ புத்தகத்தை ‘நமோ செயலி’யில் தான் பதிவேற்றம் செய்யப்போவதாகவும் மோடி தெரிவித்து, அவருக்கு வாழ்த்து கூறியது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!