சிறிலங்கன் விமான சேவை பயணங்கள் தடைப்படும் அபாயம்

சிறிலங்காவின் தேசிய விமான சேவையான சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கான எரிபொருள் விநியோகத்தை வரும் புதன்கிழமையுடன் நிறுத்தவுள்ளதாக, சிறிலங்காவின் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எச்சரித்துள்ளது.

தமக்கு செலுத்த வேண்டிய சுமார் 14 பில்லியன் ரூபாவில் குறைந்தபட்சம், 1 பில்லியன் ரூபாவை குறித்த காலக்கெடுவுக்குள் வழங்கத் தவறினால், எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என்று சிறிலங்காவின் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.

இதுதொடர்பான முடிவை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம், சிறிலங்காவின் சிவில் விமான, போக்குவரத்து அமைச்சு, சிறிலங்கா அதிபர் செயலகம் ஆகியவற்றுக்கும் அறிவித்துள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இந்த முடிவு குறித்து, சிறிலங்கன் விமான சேவை அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், இந்த முடிவினால், விமான சேவைகள் நிறுத்தப்படும் ஆபத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு, சிறிலங்கன் விமான சேவை 14 பில்லியன் ரூபாவையும், மின்சார சபை 46 பில்லியன் ரூபாவையும் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!