பழைய முறைமையிலேயே தேர்தலை நடத்த வேண்டும்

ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் பழைய முறைமையிலேயே நடத்தப்பட வேண்டும் என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. வலியுறுத்தினார்.

தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தேர்தல் முறைமை சீர்திருத்தம் ஊடாக நாட்டை மீண்டும் இரு கட்சி முறைமைக்கு கொண்டு செல்வதற்கே தற்போதைய அரசு முயற்சிக்கின்றது.

நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தேர்தலை முறைமை மாற்றங்களில் விகிதாசார தேர்தலை முறைமையே முற்போக்கான, ஜனநாயகமான தேர்தல் முறைமையாக விளங்குகின்றது.

இம்முறைமையை மாற்றுவதாக இருந்தால் தற்போது இருப்பதைவிடவும் மேலும் சிறந்த முற்போக்கான, ஜனநாயகம்மிக்க புதிய முறைமையாகவே இருக்கவேண்டும்.

உள்ளூராட்சி சபை, மாகாண சபை, பாராளுமன்றம் ஆகியவற்றில் சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவமும் மக்களின் சார்பில் இருக்கவேண்டும். அதேபோல் அனைத்து தேர்தல்களுக்கும் சம முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும்.

ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமும் இதுதான். அதேவேளை, எல்லை நிர்ணயப் பிரச்சினையால் மாகாண சபைகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, பழைய முறைமையின் கீழ் அதற்கான தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனச் சந்திப்பில் இணக்கம் காணப்பட்டது.

விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் தெரிவாகும் பாராளுமன்றம் பலவீனமாக இருந்தால் அதனை சமநிலைப்படுத்துவதற்காகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இருக்கின்றது.

எனவே, விகிதாசார தேர்தல் முறைமையில் மறுசீரமைப்பு இடம்பெறுமானால் கட்டாயம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படவேண்டும். உள்ளூராட்சி சபை, மாகாண சபை, பாராளுமன்றம் ஆகிய மூன்றுக்கும் ஒரே தேர்தல் முறைமை இருக்கவேண்டும்.

இவை தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது. எமது யோசனைகள் தெரிவிக்குழுவில் முன்வைக்கப்படும். ஏனைய கட்சிகள் மற்றும் அமைப்புகளை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளோம்” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!