சுனில் ரத்னாநாயக்க விடுதலைக்கு எதிரான வழக்கு- விலகினார் நீதிபதி.

முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல அடிப்படை உரிமைகள் மனுக்கள் மீதான விசாரணையில் இருந்து உயர்நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்னாண்டோ விலகியுள்ளார்.

இந்த மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதியரசர் முர்து பெர்னாண்டோ, தாம் இந்த விசாரணையில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார்.

ஏற்கனவே தமக்கு எதிரான தீர்ப்பை ஆட்சேபித்து சுனில் ரத்னாயக்க தாக்கல் செய்த மனு விசாரணையின் போது ஐந்து நீதியரசர் குழுவில் தாம் அங்கம் வகித்தமையை சுட்டிக்காட்டி முர்து பெர்னாண்டோ விசாரணையில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார்.

இதனையடுத்து சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முடிவை சவால் செய்யும் அடிப்படை உரிமைகள் மனுக்களை எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி அழைப்பதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.

2000 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் மிருசுவில் 8 பேர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்க ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்.

இதனை எதிர்த்து மாற்று கொள்கை மையம் (சிபிஏ) மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் பாக்கியசோதி சரவணமுத்து உள்ளிட்ட பல மனுதாரர்கள் சிறைச்சாலை ஆணையாளர், நீதி அமைச்சர், ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆணையகத்தினரை பிரதிவாதிகளாக பெயரிட்டு இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

ரத்நாயக்கருக்கு வழங்குவதற்கான முடிவு தன்னிச்சையானது, அது பொது நலனுக்காக செய்யப்படவில்லை என்று மனுதாரர்கள் வாதங்களை முன்வைத்திருந்தனர்.

2000 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள மிருசுவில் என்ற இடத்தில் எட்டு பொதுமக்களை கொலை செய்த வழக்கில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட நிலையில், இலங்கை ராணுவத்தின் சார்ஜென்ட் சுனில் ரத்நாயக்க 2015 ஜூன் 25 அன்று கொழும்பு உயர் நீதிமன்ற விசாரணை குழுவினால் மரண தண்டனை விதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, 2017, மே 20ஆம் திகதி அன்று, உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர் குழு இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் இராணுவ ஊழியர் சார்ஜென்ட் மீது விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஏகமனதாக உறுதிப்படுத்தியது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!