புலம்பெயர் தமிழர்களால் சிங்களவர்களுக்கு அச்சுறுத்தலாம்!

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து செய்யும் பொய் பிரசாரங்கள் காரணமாக அந்தந்த நாடுகளில் வாழும் சிங்களவர்களுக்கு அச்சுறுத்தல் நிலையொன்று உருவாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கூறும் பொய் பிரசாரங்களை நிறுத்த, அரசாங்கம் தலையிட்டு, முறையான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் எனவும் இராஜாங்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்த) சட்டமூலம், சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சமவாயம் (திருத்தம்) சட்ட மூலம், குற்றவியல்நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான ஒரு கட்டளை மற்றும்காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும்கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“ தமிழ் தேசிய கூட்டமைப்பு இங்கு கூறும் விடயங்களை புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் இந்த காரணிகளை கையில் எடுத்துக்கொண்டு அதில் அவர்கள் எவ்வாறு வாழ்கின்றனர், பின்னர் எமக்கு எதிராக எவ்வாறு செயற்படுகின்றனர் என்பது குறித்து நாம் கவனம் செலுத்தாது உள்ளோம்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் மிகப்பெரிய இனப்படுகொலை இடம்பெற்றதாகவும், அதில் தமிழ் மக்களுக்கு பாரிய அழிவு ஏற்பட்டது, 40 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றெல்லாம் சர்வதேச புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பிரசாரம் செய்துகொண்டுள்ளது.

இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே அடித்தளம் போட்டு வருகின்றது. கூட்டமைப்பினர் இங்கு பேசுவதை கொண்டே பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மூன்று இலட்சம் மக்கள் நெருக்கடி நிலையில் இருந்து இராணுவத்தினால் காப்பற்றப்பட்டனர். இந்த மூன்று இலட்சம் மக்களையும் கொன்று குவித்திருந்தால் இவர்கள் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் இராணுவம் இவர்களை காப்பாற்றியது. இப்போது கனடாவில் இனப்படுகொலை வாரம் என அனுஷ்டிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் அடுத்த பரம்பரை தமிழ் மக்கள் இலங்கையில் அடக்குமுறை இடம்பெறுவதாக நினைப்பார்கள்.

எனவே இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும். தமிழ் அமைப்புகளின் இந்த செயற்பாடுகள் காரணமாக அங்கு வாழும் சிங்களவர்களுக்கு அச்சுறுத்தல் நிலையே உருவாகியுள்ளது.

இது கனடாவில் மட்டுமல்ல, தமிழ் புலம்பெயர் அமைப்புகள் இருக்கும் சகல இடங்களிலும் இவ்வாறான செயற்படுகள் இடம்பெற்றால் அங்கு வாழும் சிங்கள மக்களுக்கு பாரிய அச்சுறுத்தல் நிலையொன்று உருவாகும். எனவே இதனை நிறுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!