இளைஞனை சுட்டுக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை!

திருகோணமலையில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். குறித்த கொலைக்கு உடந்தையாக இருந்தார் என குற்றம் சுமத்தப்பட்ட இரண்டாவது எதிரி, அரச தரப்பு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க தவறியமையால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

1995ம் ஆண்டு திருகோணமலை நகரில் உள்ள திரையறங்கு ஒன்றில் இரவு படம் பார்த்துவிட்ட வந்த இளைஞர், திருமலை பகுதியில் வைத்து சுட்டுகொலை செய்யப்பட்டார். இரு எதிரிகள் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். 2008ம் ஆண்டு சட்டமா அதிபரினால் திருகோணமலை நீதிமன்றில் இருவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

எதிரிகள் நீதிமன்றுக்கு வராது தலைமறைவாக இருந்த சூழ்நிலையில், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த திங்கட் கிழமை இரசாயன பகுப்பாய்வு, கைத்துப்பாக்கி தொடர்பான பகுப்பாய்வு அறிக்கை மன்றில் தாக்கல் செய்து, நிபுணத்துவ சாட்சியம் அளிக்கப்பட்ட பின் வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதனை அடுத்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முதலாம் எதிரியான ஆயுத குழு உறுப்பினரை குற்றவாளி என அறிவித்து ஆயுள் தண்டனை விதித்த தீர்ப்பளித்துள்ளார்.

இரண்டாம் எதிரி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!