யாழ். மாவட்ட ஆசிரியர்களுக்கு இன்று தடுப்பூசி வழங்கும் பணி! வடக்கு சுகாதாரப் பணிப்பாளர் அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் பணி இன்று முன்னெடுக்கப்படும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் திட்டத்தில் 2ஆம் கட்டத்தில் முதலாவது டோஸ் வழங்கும் பணி கடந்த ஜூலை மாதம் 5ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடைபெற்று வருகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் ஜூலை மாதம் 5ஆம் திகதி முதல் நாளில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 465 பேருக்கும், 6ஆம் திகதி இரண்டாம் நாளில் 9 ஆயிரத்து 457 பேருக்கும், 7ஆம் திகதி மூன்றாம் நாளில் 12 ஆயிரத்து 34 பேருக்கும், 8ஆம் திகதியான நேற்று நான்காம் நாளில் 7 ஆயிரத்து 497 பேருக்கும் என மொத்தமாக 38 ஆயிரத்து 456 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசியேற்றும் பணிகள் இன்று 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறும்.

மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட ஆபத்துநிலை உடைய கர்ப்பிணித் தாய்மார்கள், 35 வயதுக்கு மேற்பட்ட அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், அத்துடன் முன் களப் பணியாளர்களாக உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் அவர்களுடைய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் நாளை 10ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணிமுதல் தடுப்பூசிகள் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்களுக்குத் தடுப்பூசி வழங்குவதற்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பழை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றம் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைகளிலும் நாளை சனிக்கிழமை காலை 8 மணி முதல் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

அவ்வாறான நிலைமைகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தமது பிரதேசத்துக்குரிய சுகாதார மருத்துவ அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியைப் பாதுகாப்பாகப் பெற்றுக்கொள்ள முடியும்” – என்றுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!