கிராம மக்கள் முன்னிலையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: பின்னர் நடந்த சோகம்!

தமிழகத்தில் வாந்தி எடுத்த 20 வயது பெண் எலி பேஸ்ட் சாப்பிட்டார் என பின்னர் தெரியவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கள்ளடிமேடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் சாதனா வயது (20). 12 ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் பணி நிமித்தமாக சாதனா தீபமங்கலம் என்ற கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு உள்ள உறவினர் இளையபாரதி கிரிஜா தம்பதியின் வீட்டில் தங்கிய போது 2 வயது குழந்தையை தூக்கி கொஞ்சி விளையாடிய பின்னர் வீட்டில் விட்டு விட்டு சென்றுள்ளார்.

பின்னர் அந்தக் குழந்தையின் கழுத்தில் இருந்த 4 கிராம் தங்க செயின் காணவில்லை என குழந்தையின் பெற்றோர், சாதனா தான் நகையை எடுத்து இருக்க வேண்டுமென கிராம மக்கள் முன்பாக அவரை சோதனை செய்துள்ளனர்.

இதனால் சாதனா அழுதுகொண்டு நான் நகையை எடுக்கவில்லை என கைகூப்பி மன்றாடினார் என கூறப்படுகிறது. மேலும் சாதனாவின் தந்தை செந்தில்குமாருக்கும் தொலைபேசி மூலம் உங்கள் மகள் நகையைத் திருடி விட்டதாக கோபத்துடன் பேசியுள்ளனர்.

இந்நிலையில் கிராம மக்கள் முன்னிலையில் தன்னை தகாத வார்த்தையால் திட்டி அசிங்கப்படுத்தி விட்டதால் அவமானம் தாங்க முடியாமல் அந்த இளம்பெண் சாதனா மணக்கால் அய்யம்பேட்டை என்ற பகுதிக்குச் சென்று எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார்.

மாலை 5 மணி வரை தனது மகள் சாதனாவை காணவில்லை. அதனை அடுத்து தந்தை சாதனாவுக்கு தொலைபேசி மூலம் பேசியதில் நான் மணக்கால் அயம்பேட்டையில் தான் உள்ளேன் என கூறியதனை அடுத்து சாதனாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் தந்தை செந்தில் குமார்.

வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் சாதனா தொடர்ந்து வாந்தி எடுத்ததை அடுத்து பதறிப்போன பெற்றோர்கள் சாதனாவிடம் கேட்டபொழுது தான் எலி பேஸ்ட் உண்டு விட்டதாக பெற்றோர்களிடம் கூறி உள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சாதனாவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில் ஒருவார கால சிகிச்சையில் இருந்த சாதனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் அடிப்படையில் சாதனாவின் உறவினர்களான இளையபாரதி (28) ஐயப்பன் (30) ஆகிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!