சஜித் தரப்பு முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க கூடாது என ரணிலுக்கு ஆலோசனை

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, நாடாளுமன்றில் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆதரிக்கக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு நெருக்கமான தரப்புகள் இதனை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

முழு அரசாங்கத்திற்கும் எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானமாக இருந்தால் அதனை ஆதரிக்க முடியும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் அதன் தற்போதைய வடிவத்தில் முன்வைக்கப்பட்டால், அது அரசாங்கத்திற்குள் உள்ள பிளவுகளைத் தீர்க்கவே உதவும் என்று கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

எனவே இந்த பிரேரணையை அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையற்ற பிரேரணையாக மாற்றினால் மட்டுமே அதை ரணில் விக்கிரமசிங்க ஆதரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

எவ்வாறாயினும், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்த வாரம் விக்ரமசிங்கவை சந்தித்து இந்த விஷயத்தில் இறுதி முடிவை எடுக்கவுள்ளாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!