பரிட்சைகளை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சை ஆகியவற்றை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, பாடசாலைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளமையினால் மாணவர்கள் குழப்ப நிலையில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மாணவர்கள் கடுமையான மன உளைச்சலை எதிர்கொண்டுள்ள நிலையிலே, கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், பரீட்சைகளை ஒத்திவைத்து பாடத்திட்டத்தினை நிறைவு செய்வதற்கான சந்தப்பத்தை வழங்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இணையவழி கல்வி முறைமை அறிமுகப்படுத்தப்படவில்லை எனவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் இணைய வசதிகள் காணப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இணையவழி கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான நடைமுறைத் திட்டத்தினை வகுப்பதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் தவறவிட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!