அரசாங்கம் மக்களை ஏமாற்றக் கூடாது!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மந்தக் கதியில் இடம்பெறுவதாகவும், அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு மக்களை ஏமாற்ற நினைக்கக்கூடாது என்றும் கொழும்பு பேராயர் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொழும்பு, ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தற்போதைய நிலவரம் மற்றும் விசாரணைகள் தொடர்பாக நாம் ஜனாதிபதிக்கு எழுத்து மூலமான ஆவணமொன்றை அனுப்பியுள்ளோம். அனைத்து விடயங்களையும் ஆராய்ந்தே இந்த ஆவணத்தை தயார் செய்துள்ளோம். எம்மைப் பொறுத்தவரை இதுதொடர்பான விசாரணைகளில் இன்னமும் வேகம் தேவைப்படுகிறது.

நாம் அனைத்துக் கட்சிகளிடமும் இதுதொடர்பாக கூறியுள்ளோம். எமது கவலைகளைக் குறிப்பிட்டுள்ளோம். அரசாங்கம் இந்த விசாரணைகளை தீவிரப்படுத்த வேண்டும். ஓரிருவரை கைது செய்து, நீதிமன்றுக்கு அழைத்துவந்து, இந்த விசாரணைகள் முடிவுற்றதாகக் கூறவேண்டாம். இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு மக்களை திருப்திப்படுத்த முடியாது.

அப்படி அரசாங்கமோ அல்லது விசாரணைகளை முன்னெடுக்கும் திணைக்களங்களோ நினைத்தால், அது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் செயற்பாடாகும். நாம் இந்த விடயத்தை அவ்வளவு எளிதாக கைவிடப்போவதில்லை” என அவர் குறிப்பபிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!