அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்ட அரச ஊழியர்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் பிரதமர் அவதானம்

அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்ட அரச மற்றும் பகுதியளவிலான அரச நிறுவன ஊழியர்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் பிரதமர் அவதானம் செலுத்தியுள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போது பிரதமர் இது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, அதனுடன் தொடர்புடைய சட்ட வரைவுகளை தயாரிப்பதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் உள்ளிட்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த குழுவின் பரிந்துரைகளை ஒரு மாத காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், நல்லாட்சி அரசாங்கத்தினால் சட்டவிரோத செயற்பாடுகளின் மூலம் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக அரச ஊழியர்கள் முகங்கொடுக்க நேரிட்ட பிரச்சினைகள் தொடர்பில், நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே.மாயாதுன்னே இதன்போது பிரதமருக்கு எடுத்துரைத்தார்.

இந்த நிலையில், அதிகாரிகளுக்கான சட்ட கட்டமைப்பிற்கு அப்பால் நேர்மையுடன் கடமைகளைச் செய்ய அனுமதிக்கக்கூடிய வரம்புகளை அடையாளம் கண்டு, அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இதன்போது பிரதமருக்கு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!