பொருளாதாரம் படுவீழ்ச்சி, பாரிய அழுத்தத்தில் மக்கள் – எரான் விக்கிரமரத்ன குற்றச்சாட்டு

நாட்டு மக்கள் தற்போது அதிக அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளனர், நமது நாடு சுதந்திரமடைந்ததன் பின் பாரியளவு பொருளாதார தாக்கத்தை தற்போதே எதிர்கொண்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

ஒருபுறம் வருமானம் குறைவடைந்துள்ளது. பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. வருமானம் எவ்வகையிலும் அதிகரிக்கவில்லை. அதிகரிக்கப்படவுமில்லை. வேலைவாய்ப்புப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நாளாந்த வருமானம் பெறுபவர்கள் பாரிய பொருளாதாரப் பின்னடைவை எதிர்கொண்டுள்ளனர். 2015ஆம் ஆண்டு எமது ஆட்சியில் அரச ஊழியர்களின் வருமானத்தை பாரியளவு அதிகரித்தோம்.

அதனைச் சிலர் மறந்திருப்பர். ஆரம்ப நிலையிலிருந்த ஊழியர்கள் 11730 ரூபா சம்பளத்தையே பெற்றனர். எமது அரசில் அதனை 24250ஆக அதிகரித்தோம்.

அதேபோன்று மேலாண்மை உதவியாளர்கள் பெற்று வந்த அடிப்படைச் சம்பளமான 13990 ஐ ரூபாவை 28940ஆக அதிகரித்தோம்.

இது நூறு சதவீத அதிகரிப்பு. அதேபோன்று துணை அதிகாரிகள் பெற்றுவந்த ஆரம்பச் சம்பளமான 11215ஐ ரூபாவை 31490 ரூபாவாக அதிகரித்தோம்.

அதேபோன்று நிறைவேற்று ஊழியர்களது ஆரம்பச் சம்பளத்தை 22935 இலிருந்து 47615 ஆக அதிகரித்தோம். குறிப்பிட்டுக் கூறினால் குறைந்த செலவீனம் இருந்த காலமாக எமது நல்லாட்சிக் காலத்தைக் குறிப்பிடலாம் எனத் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!